வாழ்வின் அர்த்தம் அறிய உதவும் 'இகிகாய்'

2 mins read
44055d3a-6cda-4eef-9047-ff6ba9590af6
-

ஜப்பானிய மக்கள் அவர்களது ஆரோக்கியத்துக்காக உலகளவில் புகழ்பெற்றவர்கள். 2022-ஆம் ஆண்டில், ஆக ஆரோக்கியமான நாடாக ஜப்பான் விளங்கியது. 'இகிகாய்' தத்துவம், துடிப்புமிக்க ஜப்பானியர்களின் நீண்ட, இன்பமான ஆயுளுக்கான ரகசியமாகக் கருதப்படுகிறது.

'இகிகாய்' எனும் ஜப்பானிய சொல், 'வாழ்க்கையின் அர்த்தம்' என்று பொருள்படும். 'இகி' என்பது வாழ்க்கையைக் குறிக்கின்றது. 'காய்' என்பது அர்த்தம் அல்லது பயனைக் குறிக்கின்றது.

முழுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இகிகாய் தத்துவம் மக்களுக்கு வழிகாட்டுகிறது. அண்மைய காலக்கட்டத்தில், வேலையையும் வாழ்க்கையையும் சமாளிப்பதற்கான வழிகாட்டியாக இது மேற்கத்திய நாடுகளில் பிரபலம் அடைந்துள்ளது. இதற்கு காரணம், 2016-ஆம் ஆண்டில் ஹெக்டர் கார்சியா, ஃபிரான்செஸ்க் மிராலெஸ் என இரண்டு எழுத்தாளர்கள் எழுதிய 'இகிகாய்' எனும் நூலே. ஜப்பானின் ஓகினாவா பகுதியில் ஆராய்ச்சி செய்ததன் பின்னர், இந்நூலை அவர்கள் எழுதினர்.

இகிகாய் தத்துவத்தைப் புரிந்துகொள்ள, நமக்குப் பிடித்தவை, நாம் சிறந்து விளங்கும் நடவடிக்கைகள், பொருள் ஈட்டக் கூடிய நடவடிக்கைகள், இந்த உலகத்தின் தேவைகள், ஆகிய நான்கு வாழ்வியல் அங்கங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர், இவை நான்கும் சந்திக்கும் இடத்தைக் கண்டறிய வேண்டும். அதுவே, நமது வாழ்வின் இகிகாய் என 'இகிகாய்' நூல் கூறுகிறது.

சுருங்கச் சொன்னால், இந்த நான்கையும் நிறைவேற்றும் நடவடிக்கைகளே நம் வாழ்வில் அதிக அர்த்தத்தையும் பொலிவையும் கூட்டுபவை. அவையே நமக்கு ஊக்கம் அளித்து, தொடர்ந்து சீரிய நோக்குடன் செயல்படுவதற்கான சக்தியைத் தருகின்றன. சோர்வடையும் போதெல்லாம், நமது இகிகாயை நாம் நினைவுகூர்ந்தாலே போதும்.