ஆரோக்கிய வாழ்க்கை தரும் ஆனந்தம்

ஆரோக்கிய வாழ்க்கை தரும் ஆனந்தம்

2 mins read
f789de07-ece5-4b87-8a51-7169bdf2f655
-

2005-ஆம் ஆண்டில் தனக்கு நாக்கில் புற்றுநோய்க் கட்டி இருப்பது திரு ரமாபதி துரைசாமிக்குத் தெரியவந்தது. இதை முற்றிலும் எதிர்பாராத அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியுற்றனர்.

சிகிச்சை மூலம் இந்தக் கட்டி அகற்றப்பட்டதன் பின்னர், திரு ரமாபதிக்கு வார்த்தைகளை உச்சரிப்பதுக் கடினமாக இருந்தது. இருந்தும், இரண்டு மாதங்களிலேயே அவரது வாழ்க்கை வழக்க நிலைக்குத் திரும்பியது.

ஒவ்வோர் ஆண்டும் மருத்துவச் சோதனைக்குச் சென்ற அவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புற்றுநோயிலிருந்து முழுதாகக் குணமடைந்தார். அச்சமயத்தில், அவரின் மனைவி திருமதி சுதாவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

எனினும், நம்பிக்கையை இழக்காது எதிர்நீச்சல் போட்டனர் ரமாபதி குடும்பத்தினர். திருமதி சுதாவின் புற்றுநோய் முதல் கட்டத்தில் இருந்தாலும், நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தது. புற்றுநோய்க் கட்டியை அகற்ற திருமதி சுதா ஆறு மாதங்களுக்குக் 'கீமோ' சிகிச்சைக்குச் சென்றார். சிகிச்சை காரணமாக, அவர் தனது நீண்ட கூந்தலை இழந்தார்; பல நேரங்களில் சோர்வாக உணர்ந்தார்.

"குடும்பத்தின் முழுமையான ஆதரவும், எனது ஆரோக்கிய வாழ்க்கைமுறையும் நான் சீக்கிரம் குணமடைய உதவியது," என்று கூறினார் திருமதி சுதா. இந்த சம்பவங்கள் அவரின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றின.

வாழ்க்கையை அர்த்தமிக்கதாக்கச் சமூகத்திற்குப் பங்களிக்கவேண்டும் என அவர் முடிவெடுத்தார். புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அமைக்கப்பட்ட பெண்கள் ஆதரவு குழுவில் அவர் தொண்டூழியராகச் சேர்ந்தார்.

"இந்த ஆதரவு குழுவினால் பயனடைவோரைக் காணும்போது மனம் நெகிழும். துன்பம் வரும்போது விடாமுயற்சியுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்," என்றார் திருமதி சுதா.