கடல் தாண்டி பொங்கும் தைத் திருநாள்

கடல் தாண்டி பொங்கும் தைத் திருநாள்

15 Mar 2023 - 2:41 pm

2 mins read

புதிய மணவாழ்க்கையைத் தொடங்கி இருக்கும் அமுதினி சிவம், இன்று கணவருடன் சேர்ந்து சிங்கப்பூரில் பொங்கல் பொங்குகிறார். கடந்த நவம்பர் மாதம் இவருக்கு ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்தது.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் இவரால் தாய்நாடான சிங்கப்பூருக்குத் திரும்ப வர முடியவில்லை. நான்காண்டுகளுக்குப் பின்னர், பொங்கல் கொண்டாடுவதற்காக இப்போது சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கிறார் அமுதினி.

ஆஸ்திரேலியத் தலைநகரான கேன்பராவைச் சேர்ந்த இவரது கணவர் தாமஸ் பிரெண்டேன், சிங்கப்பூரில் குடும்பத்துடன் தலைப் பொங்கலைக் கொண்டாட மிக ஆவலுடன் இருந்தார்.

வெளிநாட்டில் இருந்தபோது தம் குடும்பத்தாரைக் காணவும் சிங்கப்பூர் உணவுவகைகளைச் சுவைக்கவும் தாமஸ் பெரிதும் ஏங்கினார். அவர் கடல் தாண்டி பயணிப்பது இதுவே முதல் முறை.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பொங்கல் வைத்துத் தைத் திருநாளைக் கொண்டாடுவது உண்டு. ஆனால், சிங்கப்பூர் வீடுகளிலும் லிட்டில் இந்தியாவிலும் நடைபெறும் சிறப்பான கொண்டாட்டங்கள் தனி ஆனந்தம் தருபவை என்றார் அமுதினி.

சிங்கப்பூரில் ஒவ்வொரு பொங்கலையும் குடும்பத்தினரோடு அமுதினி கொண்டாடுவார். இம்முறை கணவருடன் கொண்டாடுவது தனக்கு ஒரு புதிய அனுபவம் என்று அவர் கூறினார். கணவருக்குத் தமிழரின் பண்பு நெறிகளை எடுத்துரைக்கப் பொங்கல் போன்ற ஒரு திருநாள் ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

கிறிஸ்துவரான தாமஸ், இந்திய கலாசாரத்தைப் பெரிதும் விரும்புபவர். தமிழ் உணவு வகைகளில் பாயசத்தையும் தோசையையும் அவர் விரும்பி சாப்பிடுவார். இவர் தமிழ் சொற்களைக் கற்றுக்கொண்டு சரியாக உச்சரிக்க முயற்சி செய்வது பெருமிதம் அளிப்பதாகக் கூறினார், அமுதினியின் தாயார் சரஸ்வதி இளங்கோவன்.