மின்னிலக்க பொம்மலாட்டம் நடத்தும் இளையர்கள்

மின்னிலக்க பொம்மலாட்டம் நடத்தும் இளையர்கள்

2 mins read
b465eee1-6957-411a-b792-fca67f612f54
-

தமிழரின் பாரம்பரிய கலையான பொம்மலாட்டம், பொதுவாகத் திரை கட்டி பொம்மைகளை ஆட வைத்துப் படைக்கப்படும். இக்கலை 4,000 ஆண்டு பழமையானது. அதனைக் கணினித் திரைக்குக் கொண்டு வந்துள்ளனர் இளையர்கள் சஞ்சய் முத்துக்குமரனும் சக்தி நிவாஸும். 'கிளாஸிக்கல் சைபர் ஆர்ட்ஸ்' எனும் நிறுவனத்தை இருவரும் நடத்தி வருகின்றனர்.

சென்னையின் தக்‌ஷினா சித்திரா கலை அரும்பொருளகத்துக்குச் சென்றிருந்த சஞ்சய், அங்குப் பொம்மலாட்டக் கலைஞர்களைச் சந்தித்து, இக்கலையைப் பற்றி மேலும் அறிந்து வந்தார்.

"தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் படத்தொகுப்பு முதலிய திறன்கள் இன்றியமையாதவை. அவற்றை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் தனிப்பட்ட பாடங்கள் குறைவு. பொம்மலாட்டத்தின் மூலம் இத்தகைய நவீன திறன்களையும், வரலாற்றுச் செய்திகளையும் மாணவர்களுக்கு அளிக்க முயற்சி செய்கிறோம்," என்றார் சஞ்சய்.

இந்நிறுவனத்தின்மூலம், இரு இளையர்களும் பள்ளிகளுக்குச் சென்று மின் பொம்மலாட்ட பயிலரங்குகளை நடத்தி வருகின்றனர். 2022-ஆம் ஆண்டில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அவர்கள் நடத்திய பயிலரங்கு 300 மாணவர்களை ஈர்த்தது.

பயிலரங்குகளில் பங்கேற்கும் மாணவர்கள், புத்தாக்க முறையில் கதைகளை உருவாக்குவது பற்றிக் கற்றுக்கொண்டனர். தனித்துவமான பொம்மைகளைச் செயலியில் வடிவமைப்பது, இசை சேர்ப்பது, ஆகியவற்றிலும் அவர்கள் ஈடுபட்டனர். தங்களின் கற்பனை வளத்தைக் கொண்டு சுவாரசியமான கதைகளைப் படைக்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

தங்களின் கற்பனை வளத்தைக் கொண்டு பிரபல திரைப்பட நடிகர்கள், கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு சுயமாகக் கதை படைக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மின்னிலக்க பொம்மலாட்டத்துக்கென தனியே ஒரு செயலியைத் தாமாக உருவாக்குவதே தற்போது இவ்விருவரின் கனவும், குறிக்கோளும் ஆகும்.