இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் சிறு பிள்ளையின் கைகளில் கூட திறன்பேசி உள்ளது. கண் விழிக்கும் நொடியிலிருந்து கண்ணுறங்கும் கணம் வரையில் கண் சிமிட்டாமல் திரையையே பார்த்துக் கொண்டிருக்கும் காலம் இது. இதன் விளைவாக, புவியின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நபருடன் நட்பு பாராட்டுகையில், அருகிலேயே இருக்கும் அண்டைவீட்டார்களை மறந்துவிடுகிறோம். குறுஞ்செய்திவழி எளிதாக உரையாடும் இளையர்களுக்கு முகம் பார்த்து உரையாடும் வழக்கமே பிடிக்காத ஒன்றாகிவிட்டது.
இந்த அவல நிலையைக் கண்டு மிகவும் மனம் வருந்தினர், கிரேஸ் அன் சுவா, தாம் ஜுன் ஹான், வெலன்சியா வாங் ஆகியோர். மக்கள் தற்சமயம் உரையாடும் விதத்தை மாற்றப் படையெடுத்துள்ளனர் இவ்விளையர்கள்.
பல்கலைக்கழக பட்டப்படிப்புக் காலத்தில் மூவரும் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்தனர். அங்கு அவர்கள் அனுபவித்த ஒற்றுமை உணர்வும் நட்பும் அவர்களை ஃபிரெண்ட்சோன் (Friendzone) என்னும் தளத்தை உருவாக்க தூண்டியது.
இதன் மூலம் மக்கள் தங்கள் தொலைபேசியைத் தாண்டி சக குடியிருப்பாளர்களுடனும் சமூகத்தினருடனும் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு புது உறவுகளை வளர்த்துக்கொள்வார்கள் என்று இந்த இளையர்கள் நம்புகின்றனர்.
பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து புது நடவடிக்கைகளில் பங்கேற்க இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம். தங்களின் நட்பை அவர்கள் மேலும் ஆழமாக்கிக் கொள்ளலாம். பல புதுமையான அனுபவங்களைப் பெறுவதோடு, வெவ்வேறு பின்னணிகள் கொண்டவர்களுடன் பழகி நட்பு பாராட்டும் வாய்ப்பினையும் அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

