செல்லப்பிராணிகள் வளர்க்க அலாதி ஆசை கொள்ளும் பிள்ளைகள்

செல்லப்பிராணிகள் வளர்க்க அலாதி ஆசை கொள்ளும் பிள்ளைகள்

2 mins read
807fc88b-a60d-41f8-b38b-fcc378594ff3
முயல் ஆண்டான 2023ல் முயல்கள் விற்பனை அதிகரித்தது. படம்: சாவ் பாவ் -

சிறு பிராயத்தில் செல்லப்பிராணிகள் வளர்க்க பலருக்கும் ஆர்வம் இருக்கும். ஆகையால், முயல் ஆண்டின் வருகையுடன் முயல்களை அன்பளிப்பாக வழங்கும் போக்கும் வந்தது ஆச்சரியத்திற்குரியதல்ல.

இந்த போக்கு விலங்கு நல குழுக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. "விழாக்காலம் முடிந்தவுடன் உணர்ச்சி வேகத்தில் வாங்கப்பட்ட சிறிய விலங்குகள் கைவிடப்படும் நிலை கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்நிலை வருத்தமளிக்கிறது," என்று சிங்கப்பூர் விலங்கு நல காப்பகத்தின் ஆர்த்தி ஷங்கர் கூறினார்.

செல்லப்பிராணிகள் வேண்டும் என்று சிறுவர்கள் ஆசைப்படுவது அரிதல்ல. இருப்பினும், ஆழ்ந்து சிந்திக்காமல் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு இதில் முடிவெடுக்க முடியாது. செல்லப்பிராணி வளர்ப்பது ஒரு வாழ்நாள் கடமை என்பதை சிறுவர்கள் உணரவேண்டும். நீண்ட ஆயுட்காலம் கொண்ட மனிதன் வாழ்நாளில் பல செல்லப்பிராணிகளை எடுத்து வளர்க்கலாம். ஆனால், குறுகிய ஆயுட்காலம் கொண்ட செல்லப்பிராணிகளுக்கோ, தம் வாழ்வில் பெரும்பாலான வாழும் காலத்தை உரிமையாளர்களுடன் செலவிடுகின்றன. ஆதலால், அவற்றை நன்கு பராமரிப்பது உரிமையாளர்களின் கடமையாகும்.

கள்ளங்கபடம் அற்ற செல்லப்பிராணிகள் பலருக்குச் சிறந்த நண்பர்களாக திகழ்கின்றன. செல்லப்பிராணி வளர்ப்பதால் சிறுவர்களுக்கு பல நன்மைகள் உண்டு என்று அமெரிக்க மனநல கல்விக்கூடம் கூறியுள்ளது. சிறுவர்கள் தன்னம்பிக்கையுடனும் அனுதாபத்துடனும் வளர்கின்றனர். செல்லப்பிராணிகளுடன் நல்ல உறவுகள் கொண்டிருக்கும் சிறுவர்கள் மற்றவருடன் எளிதாக உரையாடி நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

செல்லப்பிராணிகள் வளர்க்க விரும்புவோர் தம்மால் அதற்குத் தேவையான அனைத்தையும் வழங்கி அதை ஒரு ஜீவனாக மதித்து நடத்த இயலுமா என்று ஆழ்ந்து யோசிப்பது அவசியம். இது சாத்தியம் என்றால், அன்பை மட்டுமே பொழியும் உறவாக செல்லப்பிராணிகள் திகழும்.