சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில் பாதைகளிலுள்ள 170 நிலையங்களின் பெயர்களையும் 12 நிமிடங்களில் ஒப்புவித்து சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் சஸ்திக் வேல் விவேக்.
எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில் பாதைகளில் உள்ள அனைத்து நிலையங்களின் பெயர்களையும் நிலையக் குறியீட்டுடன் சொல்லி அசத்துகிறார் இந்த பாலர் பள்ளி மாணவர். இச்சாதனையை நிகழ்த்தியபோது சஸ்திக்கிற்கு ஐந்து வயது.
"சஸ்திக்கிடம் பிறந்தது முதலே கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகமாக இருந்தது. வீட்டில் இருந்தாலும் வெளியே சென்றாலும் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் கிடைக்கப்பெறும் தகவல்களையும் இயல்பாகவே நினைவில் வைத்துக்கொள்வார். மறுமுறை அதைப்பற்றி பேசும்போது மிகத் துல்லியமாகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு எங்களைப் பலமுறை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்," என்று கூறினார் எம்ஆர்டி நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் சஸ்திக்கின் தந்தை விவேக் செல்வம்.
பொழுதுபோக்கிற்காக ரயில் நிலையங்களின் பெயர்களை கவனித்து நினைவில் வைத்துக்கொள்ள தொடங்கிய சஸ்திக், முற்றிலும் ஆர்வத்தின் அடிப்படையில் தம் கற்றலில் ஈடுபட்டு தற்போது சாதனையாளராக திகழ்கிறார்.
சிங்கையின் ரயில் நிலையங்கள் மட்டுமல்லாது நாடுகளின் பெயர்கள், அந்நாடுகள் அமைந்துள்ள பகுதிகளையும் அவற்றின் தலைநகரங்களையும் நினைவில் வைத்து அசத்துகிறார்.
தம் பிள்ளைகளுக்கு தொலைக்காட்சி, கைப்பேசி போன்ற தொழில்நுட்பச் சாதனங்கள் தருவதைத் தவிர்க்கும் சஸ்திக்கின் பெற்றோர், "கற்றலைத் திணிக்க முடியாது; அதனால் பயனும் இல்லை. மாறாக பிள்ளைகளின் புத்தாக்கச் சிந்தனையைக் கட்டுப்படுத்தி அவர்களின் ஆர்வத்தை அது குலைத்துவிடும்," என்று பகிர்ந்துகொண்டனர்.
"எந்தவொரு கற்றல் வழிமுறையும் மகிழ்ச்சியானதாக, பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும்," என்றும் கூறினார் சஸ்திக்கின் தந்தை.

