செவித்திறன் குறைபாடுள்ள பெற்றோர்களின் குழந்தைகளை கோடா (CODA - Child of Deaf Adult) என்று அழைப்பது உண்டு. அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் 2021ல், அதே பெயர்கொண்ட ஓர் ஆவணப்படம் வெளிவந்தது.
சிங்கப்பூரில் இத்தகைய சூழலை எதிர்நோக்கியுள்ள சிலர், தம் வாழ்க்கை அனுபவங்களை சிஎன்ஏ (CNA) செய்தியுடன் பகிர்ந்துகொண்டனர்.
தியான ஷோனா என்ற மாணவியின் வகுப்பு மாணவர்கள் அவளுடைய பெற்றோருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதை அறிந்தவுடன் அவள்மீது இரக்கம் காட்டினர். அவள் சைகை மொழி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை நினைத்து அவர்கள் பரிதாபம் காட்டினர். அதில் வருத்தம் கொண்ட ஷோனா, "நான் சைகை மொழியை ஒரு சிறப்புத் திறனாகவே கருதுகிறேன். இதில் சங்கடத்திற்குறியது எதுவும் இல்லை," என்று தெரிவித்தார்.
காது கேட்காத பெற்றோர்கள் கொண்டோர் சிறு பருவத்திலிருந்தே தாய் தந்தைக்கு ஆதரவாக இருக்க சைகை மொழியை கற்றுக்கொள்வர். இதனால், தடைகளைத் தாண்டி பிள்ளைகள் பெற்றோருடன் நேரம் செலவழித்து உறவுகளை மேம்படுத்திக் கொள்கின்றனர். பெற்றோர்-பிள்ளை உறவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வளர்ந்தனர் ஷோனாவும் அவள் சகோதரர்களும்.
வீட்டுச் சூழலில் நிலவும் அமைதியால், பேசுவதில் இவர்கள் சிரமம் எதிர்நோக்கினர். சமூக சிகிச்சை சேவைகள் இவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உதவியுடனும் தங்களுடைய தாத்தா பாட்டியின் துணையுடனும் மொழி கற்க தொடங்கினர் இச்சகோதரர்கள்.
தங்களின் பெற்றோர் பல இன்னல்களைத் தாண்டி மிக அன்புடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பதால் அவர்களை முன்னுதாரணமாக பார்க்கின்றனர் ஷோனாவும் அவள் சகோதரர்களும். பெற்றோருக்கு முடிந்தவரையில் உதவியாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் விருப்பம்.

