கொவிட்-19 காலத்தின்போது நடப்பில் இருந்த கட்டுப்பாடுகளினால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே அதிக நேரம் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எப்பொழுதும் தத்தம் திசைகளில் ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தினர் திடீரென வீடுகளில் அடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. சில வீடுகளில் இது குடும்ப பிணைப்பிற்கு அதிக நேரம் ஒதுக்க கைகொடுத்தது.
சிறிய அடுக்குமாடி கட்டட வீட்டில் வசிக்கும் திரு டானும் அவருடைய குடும்பத்தினரும் அக்காலகட்டம் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கு உதவியதாக கூறினர். நீண்ட காலமாக செல்லப்பிராணி வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்த திரு டானின் பிள்ளைகளின் ஆசை அச்சமயத்தில் நிறைவேறியது. செல்லப்பிராணியைப் பராமரிப்பது ஒரு குடும்ப வேலையாகவும் அமைந்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த காலத்தில் நேரம் ஒதுக்குவதில் இருந்த சிரமங்களை சமாளிப்பது எளிதாய் இருந்ததாக திரு டான் குறிப்பிட்டார். கட்டுப்பாடுகள் தளர்ந்துவிட்ட நிலையிலும், அவர்கள் தொடர்ந்து குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, பிரச்சனைகள் எழுகையில் அவற்றைப் பகிர்ந்துகொண்டு இணைந்து தீர்வு காண்பது முதலிய முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையைப் பற்றி கருத்து தெரிவித்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், குடும்பங்களின் முக்கியத்துவத்தை இந்த கிருமித்தொற்று காலம் அனைவருக்கும் வலியுறுத்தி இருக்கிறது என்றார். "நீண்ட காலம் கழித்து என் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து அமர்ந்து உணவுண்டேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலத்தில், மாறிவரும் குடும்ப சூழல்களையும் தேவைகளையும் புரிந்துகொண்டு நாம் அனைவரும் செயல்படுவது மிக அவசியம் என்றும் அறிவுறுத்தினார் துணை பிரதமர்.

