ஒரே இடத்தில் 294 பானைகள் பொங்கி சாதனைப் பொங்கல்

ஒரே இடத்தில் 294 பானைகள் பொங்கி சாதனைப் பொங்கல்

2 mins read
c9f68149-c76a-44c2-88f2-fd744ede5930
-

கியட் ஹாங்கில் பொங்கல் கொண்டாட்ட சாதனை படைக்கப்பட்டது. குடியிருப்பாளர்கள், சமூகத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கியட் ஹாங்கில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர். அதில் 294 பேர் ஒன்றாகப் பொங்கல் பானை வைத்துப் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லிப் புதிய சாதனை படைத்தனர்.

1,200 பேருக்கு வாழை இலையில் மதிய உணவு பரிமாறப்பட்டது. இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டுப்புற பாடகர்களும், இசைக் கலைஞர்களும் மக்களை மகிழ்வித்தனர்.

காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ஆகிய பாரம்பரிய கலைகளையும் மக்கள் கண்டு களித்தனர். குறிப்பாக, ஐந்தடுக்குத் தீக்கரகம் ஏந்தி ஆடிய இந்திய நடனமணியின் மேடை நடனத்தை மக்கள் பெரிதும் ரசித்துப் பாராட்டினர்.

கிராமங்களில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவின் உணர்வு மிக சிறப்பாக இருக்கும். அத்தகைய கொண்டாட்ட உணர்வைக் கியட் ஹாங் வட்டாரத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே விழாவின் நோக்கமாக இருந்ததாகக் கூறினர் ஏற்பாட்டாளர்கள்.

2019ஆம் ஆண்டில் முதன்முதலாக 224 பேர் ஒரே இடத்தில் பொங்கல் பானை வைத்துப் பொங்கினர். அச்சாதனையை இக்குழு அவ்வாண்டு படைத்திருந்தது. அதனை முறியடிக்கும் வகையில், இந்த ஆண்டு மொத்தம் 294 பேர் ஒன்றாகப் பொங்கல் வைத்தனர். இது ஒரு புதிய சாதனை ஆகும்.

"சில ஆண்டுகாலமாய்ச் சமூகத்தினருடன் இணைந்து பொங்கலை முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. கொவிட்-19 கட்டுப்பாடுகளால் அனைவரும் ஒன்றுகூட முடியவில்லை. அது பலருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும். அதனைப் போக்கவே இவ்வாண்டின் விழாவை ஏற்பாடு செய்தோம்," என்றார் ஏற்பாட்டாளர் திரு அருமை சந்திரன்.