முதியோர் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல்

முதியோர் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல்

2 mins read
893b2306-984f-400f-8bcb-217a24ed9031
-

சிங்கப்பூர் முழுவதும் பொங்கல் விழா களைகட்டுகிறது. இந்நிலையில், ஸ்ரீ நாராயண மிஷன் தனது இல்லத்து முதியோர்களுடன் பொங்கலைக் கொண்டாடியது. இப்பொங்கல் விழாவை அது இரண்டாவது ஆண்டாக நடத்துகின்றது.

ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் தலைவர் திரு ஜெயதேவ் உன்னிதன், இந்நிகழ்ச்சி இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறினார். மேலும், சமூகத்தினருடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள அது உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொங்கல் பானையில் பாலை ஊற்றுவது, தோரணம் கட்டுதல், வண்ணம் தீட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் முதியோர் ஈடுபட்டனர். ஒருவருடன் ஒருவர் இணைந்து பொங்கல் தினத்தை அவர்கள் நிறைவாகக் கொண்டாடினர். வசந்தம் தொலைக்காட்சிக் கலைஞர்கள் படைத்த பாடல் அங்கமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை உற்சாகப்படுத்தியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் கலந்துகொண்டார். பொங்கல் தயாரித்தல், கோலம் போடுதல், தோரணம் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார்.

''மற்ற இனத்தவர்களும் தமிழர்களின் பொங்கல் பண்டிகையைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பு,'' எனத் தெரிவித்தார் திரு விக்ரம் நாயர்.

முதன்முறையாக இதுபோன்ற கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தார், ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் சீனத் தொண்டூழியரான 79 வயது திருமதி பொங் ஜின் ஜி. இந்த அனுபவம் புதுமையாக இருந்தது என்று அவர் கூறினார். இதன்மூலம், பொங்கல் கொண்டாட்டங்களைப் பற்றியும் தமிழ்க் கலாசாரத்தைப் பற்றியும் நிறைய தெரிந்துகொண்டதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.