இவ்வாண்டின் வரவுசெலவு திட்டம் குடும்பங்கள் மீது அதிக கவனம் காட்டியுள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவதன் முக்கியத்துவத்தை அரசாங்க முயற்சிகள் வலியுறுத்துகின்றன.
குழந்தை பிறந்த நொடியில் குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சியைக் குலைக்க வல்லது, அதனை தொடர்ந்து வரும் கட்டாயங்களும் பொறுப்புகளும். வேலைப் பளு ஒரு புறம் இருக்க, குழந்தைகளுடன் நீண்ட நேரம் இருக்க முடியாமல் போகின்ற்து.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க அரசாங்கம் புதிய திட்டங்கள் மூலம் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க முயற்சி செய்கிறது. குழந்தை பராமரிப்புக்கு அவசியமான நிதி உதவியும் வேலை விடுப்பு நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
தந்தைமார்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தாமல், குடும்ப தேவைகளுக்கும் முக்கியத்துவம் தரும் மனப்பான்மையை ஊக்குவிக்க நோக்கம் கொண்டுள்ளது அரசாங்கம். அவர்களின் ஈடுபாட்டினால் குழந்தைகளின் எதிர்காலம் மேலும் சிறப்பாகவும் குடும்ப பிணைப்புகள் மேலும் வலுவாகவும் இருப்பதாய் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வேலை வாழ்க்கை சமநிலையை நிர்ணயிக்கையில், ஊழியர்களுக்கு நிறுவனங்கள் உதவவேண்டும். பணிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பதால் குடும்பத்தை அவர்கள் நிராகரிக்கக் கூடும். வேலையை இழந்தால் வேறு வேலை தேடலாம்; குடும்பத்தை இழந்தால் வேறு குடும்பத்தினரை தேடிக்கொள்ள முடியாது.
குடும்ப நேரத்தை தியாகம் செய்து அதை பணிக்கு அர்ப்பணிக்கும் போக்கில் மாற்றம் கொண்டுவருவது அரசாங்க முயற்சிகளால் எளிதாக்கப்பட்டுள்ளது. வேலைகளுக்கு செல்லத் தொடங்கும் புதிய தலைமுறையினருக்கு இது ஒரு நல்ல நினைவூட்டலாக இருப்பதோடு ஆரம்பத்திலிருந்தே வேலை வாழ்க்கை சமநிலையை நிலைநாட்ட உதவும்.

