உடல் பருமன் விகிதங்கள் சிங்கப்பூரில் சமீப காலமாக உயர்ந்து வருகின்றன. குறிப்பாக இளையர்கள் இடையே இந்த பிரச்சினை அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. 18 வயதுக்குட்பட்ட உடல் பருமனான இளையர்களின் எண்ணிக்கை 2017ல் 13 விழுக்காடாக இருந்தது. இது 2021ல் 16 விழுக்காடாக உயர்ந்தது.
உடல் பருமன் சிக்கலால் தான் எதிர்நோக்கிய சவால்களை கை (Kai) என்னும் சிறுவன் சிஎன்ஏ (CNA) செய்தியுடன் பகிர்ந்து கொண்டான். "என் வகுப்பு மாணவர்கள் என்னை அடிக்கடி கேலி செய்வர். பல பெயர்கள் கொண்டு கூப்பிட்டு என்னை கிண்டல் செய்வர். என்னை ஏதோ வேற்று மனிதனைப் போல உணரவைத்தனர்." என்று பகிர்ந்துகொண்டார் அவர்.
இவர், பல இளையர்களைப்போல கணினியில் விளையாடுவது, கைத்தொலைபேசியில் விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில்தான் அதிக நேரம் செலவழித்தார். இது போன்ற உடல் உழைப்பு இல்லாத பொழுதுபோக்குகளில் அதிக நேரம் ஈடுபடுவதாலும் உடற்பயிற்சி செய்வதை வெறுப்பதாலும் பல இளையர்கள் சிறு வயதிலேயே உடல் ஆரோக்கியத்தை இழந்து தவிக்கின்றனர். உடல் பருமன் ஏற்பட்டு நோய்களுக்கு இவர்கள் ஆளாகின்றனர்.
இந்த போக்கில் மாற்றம் ஏற்படுத்த இளையர்களின் பழக்கங்களை மாற்றியாக வேண்டும். கண்டிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் உடல் பருமன் ஏற்படுவதற்கு உடல்வாகு, குடும்ப வரலாறு போன்ற மறைமுகமான காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எனவே, நாம் ஈடுபடும் பொழுதுபோக்குகள் ஆரோக்கியமானவையா என்று ஆராய வேண்டும். அதற்கேற்றவாறு, பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆரோக்கியமாக வாழ முனைய வேண்டும்.

