சிங்கப்பூர் கலையறிவியல் அருங்காட்சியகம் உலகின் முதல் கலை அறிவியல் அருங்காட்சியகம் ஆகும். இங்கு கலை, அறிவியல், கலாச்சாரம், தொழில்நுட்பம் ஆகிய கூறுகளை இணைக்கும் படைப்புகளை மக்கள் கண்டு ரசிக்கலாம். கலைகளும் அறிவியலும் சந்திக்கும் இடத்தில் புதிய கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் மலரும் என்று இந்த அருங்காட்சியகம் உணர்த்த விளைகிறது.
5000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அருங்காட்சியகம் ஏறத்தாழ 21 காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது. பெரிய அளவில், உலக புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, இயற்பியல், மரபுடைமை, கடல்சார் உயிரியல், விண்வெளி ஆய்வு சார்ந்த கண்காட்சிகளும் மக்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றன.
கலைகளுடன் அறிவியலைப் பற்றியும் தெரிந்து கொள்ள மக்களுக்கு நல்ல வாய்ப்பை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. இதனால் அவர்களுக்கு கலைகள், அறிவியல் ஆகியன குறித்து புது கண்ணோட்டங்கள் தோன்ற கூடும்.
தற்போது, கலையறிவியல் அருங்காட்சியகத்தில் மக்களுக்காக பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. "நாளைய உலகம்: அறிவியலும் கலையும் சந்திக்கின்றன" என்ற கண்காட்சி இருவழித்தொடர்பு மின்னிலக்க கருவிகளின்வழி மக்களை வருங்காலத்துக்கு கூட்டிச் செல்கிறது.
அதோடு, "மனம்: நல்வாழ்வின் வண்ணங்கள்" என்னும் தலைப்பில் இடம்பெற்ற கண்காட்சி மனநலம் குறித்த தவறான புரிதலையும், அதை சுற்றி நீடிக்கும் பாரபட்சங்களையும் மாற்ற வகைசெய்யும் உரையாடல்களைத் தூண்ட விழைகிறது.
இவ்வாறு, பலதரப்பட்ட தலைப்புகளைப் பற்றி விவாதிக்க கலைகளையும் அறிவியலையும் கையாளுகின்றது சிங்கப்பூர் கலையறிவியல் அருங்காட்சியகம். மாணவர்கள் இதில் பங்குபெறுவதால் புது அனுபவங்களைப் பெற்று அதிகம் கற்றுக் கொள்ள முடியும்.