பொதுப்போக்கு நடவடிக்கைகளில் பல வகைகள் உண்டு. அதில் பிரபலமானவை, புத்தகம் வாசித்தல், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள், நடனம் ஆடுவது முதலியவையே.
இவற்றைத் தாண்டி, தற்சமயம் பல்வேறு சுவாரசியமான பொழுதுபோக்குகளில் சிங்கப்பூரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கப்பூரின் இயற்கை சூழலில் அமைந்துள்ள பொழுதுபோக்குகளை நாடும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரின் கடலோர பகுதிகளில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை அருகில் காண ஆர்வம் கொண்டவர்கள் கடலோர இடைநிலை நடை (Intertidal Walk) என்னும் நடவடிக்கையில் அதிக நாட்டம் காட்டுகின்றனர். விரைவில் பிரபலமடைந்து விட்ட இந்த நடவடிக்கையில் வழிகாட்டிகளாக இயங்குவோருக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த பொழுதுபோக்கில் அனைத்து வயதினரும் ஈடுபடலாம். இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சிறந்த இடங்கள் இணையத்தில் பலரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றை இணையத்தில் மக்கள் எளிதில் தேடிக் கொள்கின்றனர்.
இதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் அடிக்கடி இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதோடு தம் நண்பர்களை அழைத்துச் சென்று வழிகாட்டியாக இருந்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
தேசிய பூங்கா கழகம் இது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டது. மக்கள் அதிகம் நாடி செல்லும் இடங்களில் அறிவிப்பு பலகைகளை இக்கழகம் எழுப்பியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகள் மூலம், பொதுமக்களிடையே கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கவும் அது எண்ணம் கொண்டுள்ளது. அதே சமயத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும் மக்களிடம் தெரிவித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் அது விழைகிறது.

