புக்கிட் திமா மிதிவண்டி பாதையில் வெள்ளம், கவலையுற்ற மிதிவண்டி ஓட்டுனர்கள்

புக்கிட் திமா மிதிவண்டி பாதையில் வெள்ளம், கவலையுற்ற மிதிவண்டி ஓட்டுனர்கள்

2 mins read
85cf3487-f163-4288-ac29-407d47a9ffe6
இடுப்பளவு வரை மழைநீரில் மிதிவண்டியை தூக்கிச் செல்லும் சிங்கப்பூரர் படம்: முகநூல் -

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முழுவதும் பெய்த அடை மழையின் காரணத்தினால் புக்கிட் திமா மிதிவண்டி பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. சேரும் சகதியுமாய் இருக்கும் பாதையை தவிர்த்து வருகின்றனர் அங்கு மிதிவண்டி ஓட்டும் வழக்கம் கொண்ட மிதிவண்டி ஓட்டுனர்கள். வெள்ளம் அதிகம் இருக்கும் இடங்களை மூடி வைத்துள்ளனர் அதிகாரிகள்.

தேசிய பூங்கா கழகம் நிலைமையை கண்காணித்து வருகிறது. வானிலை நிலவரங்களை பொறுத்து தேங்கியுள்ள நீரின் அளவு குறையும் என்று கழகம் கூறியது.

இப்பாதையில் அடிக்கடி மிதிவண்டி ஓட்டுபவர்கள், விழுந்த மரங்களும் சிதைவுகளும் பாதையை மறைத்த வண்ணம் இருப்பதாக சிஎன்ஏ (CNA) செய்தியிடம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டுகளின் பருவமழை காலங்களைக் காட்டிலும் இவ்வாண்டு ஏற்பட்ட வெள்ளம் மிக மோசமாக இருந்தது. அங்குள்ள பழைய வடிகால் அமைப்பு மெல்ல பழுதடைவதும் மோசமான வெள்ளம் ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று கழகம் தெரிவித்தது.

நிலைமையை கட்டுப்படுத்த பூங்கா கழகம் தண்ணீரை பொறுமையாக வெளியேற்றியது. நிரந்தரமான தீர்வு காண்கையில் அங்கு ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் சுற்றியுள்ள இயற்கையையும் விலங்குகளையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை மதிப்பிட வேண்டும் என்றும் கழகம் கூறியது.

சிங்கப்பூர் மிதிவண்டி ஓட்டுனர்கள் சம்மேளனத்தின் விளம்பரம் மற்றும் ஊடக அங்கத்தின் துணை அதிபர் திரு டொமினிக் லோ, "சிங்கப்பூரில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. புக்கிட் திமா பகுதி குறித்து முழுமையாக பரிசீலனை செய்து தேவையான மேம்பாட்டு பணிகளுக்கு நேரம் கொடுப்பது அவசியம். அப்பகுதி இயற்கையாகவே சீராகுவதற்கும் நாம் காத்திருக்க வேண்டும்," என்று சிஎன்ஏ செய்தியிடம் தெரிவித்தார்.

தொடர்ந்த வெள்ளத்தினால் மண் தளர்வு ஏற்பட்டு மரங்கள் வேரூன்ற முடியாமல் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று இயற்கை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.