மேம்பாடுகளுக்கு ஆயத்தமாகும் சிங்கப்பூரில் விலங்குகளுக்கு வாழ்விடம் உண்டா?

2 mins read
1158420d-63df-40c4-9938-f277ad768054
குடியிருப்பு பகதிகளைக் கடந்து செல்கின்றன நீர்நாய்கள் படம்: நேஷனல் ஜியோகிராபிக் -

முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கப்பூரின் மேம்பாட்டு திட்டங்கள் உலகளவில் பாராட்டப்பட்டுள்ளன. நகரச் சீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டம் சிங்கப்பூரின் நில பயன்பாட்டை அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும்.

தற்போதைய தலைமுறையின் தேவைகளோடு எதிர்கால தலைமுறையினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்படி ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இயற்கை பாதுகாப்பையும் மேம்பாட்டையும் சம நிலையில் கருதிட அது நோக்கம் கொண்டுள்ளது.

புதிய வீடுகளுக்கும் ரயில் பாதைகளுக்கும் வழிவகுக்கையில் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடர்பிலான பல கேள்விகள் எழுந்துள்ளன.

2021ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு ஐந்தில் மூன்றுக்கும் மேலான சிங்கப்பூரர்கள் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பது பொருளியல் வளர்ச்சியைவிட முக்கியம் என்று எண்ணுவதாக கண்டறிந்தது.

சிங்கப்பூரில் காடுகளிலும் இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிகளிலும்தான் பெரும்பாலான வனவிலங்குகள் வசிக்கின்றன. நகர மேம்பாட்டு பணிகள் விரிவதால் விலங்குகள் வீடுகளை இழக்கும் நிலை எழுகிறது. பாதுகாப்பு முயற்சிகளை மீறி இந்நிலை தொடர்கிறது.

நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூருக்கு இப்பிரச்சினை புதிதல்ல.

மனித நடவடிக்கைகளாலும் பருவநிலை மாற்றத்தினாலும் 1970லிருந்து வனவிலங்குகளின் எண்ணிக்கை உலகளவில் சுமார் 70 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக வனவிலங்கு நிதி அமைப்பு அறிவித்தது.

கடந்த 200 ஆண்டுகளில் சிங்கப்பூரின் இயற்கை பரப்பில் நாம் கிட்டத்தட்ட 95 விழுக்காடு இழந்துள்ளதாக சிஎன்ஏ (CNA) செய்தி கூறியது. இன்றுள்ள இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிகள் சிங்கப்பூரின் நிலப்பரப்பில் 5 விழுக்காடு மட்டுமே.

குறைந்து வரும் இயற்கைப் பகுதிகளுடன் நாட்டிலுள்ள அரிய வகை விலங்குகளையும் இழந்து வருகிறோம். இவற்றில் சில சிங்கப்பூரில் மட்டுமே காணக்கூடிய அரிய வகை உயிரினங்கள்.