பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பங்கை செய்யலாம்

2 mins read
d9903926-518e-4a81-bcfc-54790b7c0e7c
படம்: இணையம் -

அனைத்துலக அளவில் பருவநிலை மாற்றம் மக்களின் வாழ்வை அச்சுறுத்துகிறது. இப்பிரச்சினையை சமாளிக்க தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வர்த்தகங்களும் அரசாங்கங்களும் நீடித்த நிலைத்தன்மை சார்ந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைய இத்தீர்வுகள் துணை புரியும் என்று பிஸ்னஸ் டைம்ஸ் கூறியது.

சிங்கப்பூரில் நீடித்த நிலைத்தன்மையை தம் செயல்பாட்டின் முக்கிய அங்கமாக கொண்டுள்ள சில நிறுவனங்கள், தங்களது கண்டுபிடிப்புகள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு பரவுவதை காண்கின்றன.

நகரங்களில் அதிக எரிசக்தி பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் முக்கிய காரணம். ஆகையால், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான மேலாண்மை கொண்ட கட்டிடங்கள் கட்டுவது கரியமில வாயு வெளியீட்டை கணிசமாக குறைக்கிறது. வெப்பத்தை கூட்டும் வசதிகள், காற்றோட்டம், குளிர்சாதன வசதிகள் முதலியவற்றுக்கே கட்டிடங்களின் சுமார் 60 விழுக்காடு எரிசக்தி பயன்படுகிறது. இத்தகைய கூறுகளில் முன்னேற்றங்களை கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும் இதை செயல்படுத்துவதில் சிரமங்கள் பல உள்ளன. இச்சிரமங்களை சமாளிக்க அஸெண்டியென் (Azendian) என்னும் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை வழங்கி வருகிறது.

2015ல் தொடங்கப்பட்ட அஸெண்டியென் நிறுவனம் செயற்கை நுண்ணறிவின் செயல்பாட்டு ஆற்றல்களைக் கொண்டு தம்மால் முடிந்தவறை செய்து எரிசக்தி பயன்பாட்டை கட்டுப்படுத்த முயல்கிறது.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில செயல்முறைகளை தானியக்கமாக்கி நேரத்தை சேமிப்பதோடு சிக்கனத்திறன் மேம்படுவதால் எரிசக்தி பயன்பாட்டை குறைப்பது சுலபமாகிறது. கெப்பல் உள்கட்டமைப்பு நிறுவனம் அஸெண்டியெனின் தொழில்நுட்ப தீர்வுகளை தன் கட்டுப்பாடு மையங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளது.

இதுபோன்று, நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் வர்த்தக தொழில்நுட்ப துறை சார்ந்தோர் தம் பங்கை எரிசக்தி சேமிப்புக்கு ஆற்றலாம்.