புதிய பட்டதாரியான சியௌ சூ-ஜேன் ஜப்பானில் 8000 கிலோ அளவில் துணிகள் வீசியெறியப்படுகின்றன என்று கேள்விபட்டபோது ஏதாவது செய்தாக வேண்டும் என்று திண்ணமாக இருந்தார்.
தாம் பட்டப்படிப்பு முடித்துவிட்டு எந்த துறையில் இறங்கலாம் என்று சிந்துத்துக் கொண்டிருந்த சமயத்தில் இச்செய்தி அவருக்கு தெரிய வந்ததாக சிஎன்ஏ (CNA) செய்தியிடம் அவர் கூறினார்.
நீடித்த நிலைத்தன்மையில் ஆர்வமுள்ள ஜேன் இந்த வாய்ப்பை உபயோகித்து சமூக சேவையில் ஈடுபட தீர்மானித்தார்.
ஜப்பானிலிருந்து வீசியெறியப்படும் 8000 கிலோ துணிகளை வாங்குவதற்கும் அவற்றை குவித்து வைக்க ஒரு கிடங்கை வாடகைக்கு எடுப்பதற்கும் $20,000 முதலீட்டை செலவிட்டார்.
தற்போது தம் குடும்பத்தினருடன் சேர்ந்து "தி ட்ரிஃஃப்ட் ஷாப்" (The Tryft Shop) எனும் கடையை நிர்வகித்து வருகிறார். குடும்பத்துடன் சேர்ந்து அவர் 8000 கிலோ துணிகளை தரம் பிரித்து, சிலவற்றை இன்ஸ்டகிராம் (Instagram) சமூக வலைத்தளத்தில் விற்பனை செய்தார். மீதம் இருந்த துணிகளை ஏழை மக்கள், வீடில்லாதோர், முதலியோருக்கு தானம் செய்து தேவையானோருக்கு ஆடைகள் வழங்கி உதவினார்.
சேதமடைந்த நிலையில் இருக்கும் ஆடைகளை மறுசுழற்சிக்கு அனுப்ப உள்ளூர் ஆடை வடிவமைப்பாளர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் இணைந்துள்ளார்.
வீசியெறியப்படும் துணிகள் கழிவுகளின் அளவை அதிகரிக்கின்றன. சுற்றுசூழல் மாசுபடுத்தலை இது மேலும் மோசமடையச் செய்கிறது. தம்முடைய முயற்சியின் மூலம் உற்பத்தியாகும் கழிவுகளின் அளவு குறைவதாக ஜேன் சிஎன்ஏ செய்தியிடம் பகிர்ந்துகொண்டார்.
நெகிழி பைகள், தாட்கள் முதலிய பொருட்களை மறுசுழற்சி செய்யும் துறையில் பணிபுரிகிறார் ஜேனின் தந்தை. பெரிய அளவில் துணிகள் விரயமாவதை அவரே ஜேனிடம் கூறியுள்ளார்.
இப்போது, மகளின் நீடித்த நிலைத்தன்மைக்கான முயற்சிகளில் ஆதரவாக இருந்து உதவவும் செய்கிறார் ஜேனின் தந்தை.

