மருத்துவமனையில் பணிபுரியும் திரு எங் கியன் ஸ்வான் குணப்படுத்துவது நோயாளிகளை அல்ல, சுற்றுச்சூழலை. தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை பார்க்கும் இவர் மருத்துவமனையில் தண்ணீர், எரிசக்தி பயன்பாட்டை குறைத்து பசுமையாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
மருத்துவ துறை அதிக எரிசக்தியை பயன்படுத்துவதோடு அதிக அளவு கழிவுகளையும் உற்பத்தி செய்கிறது. "நோயாளிகளை குணப்படுத்துகையில் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது," என்று திரு எங் கூறுகிறார்.
குளிரூட்டி பயன்பாட்டை குறைப்பது போன்ற சிறு சிறு மாற்றங்கள் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் போது பெரும் மாற்றங்களை அவை ஏற்படுத்தும் என எண்ணுகிறார்.
உதாரணத்திற்கு, தேவைக்கும் அதிகமாக குளிராக இருக்கும் அறைகளில் வேலையாட்கள் கம்பளிகள் அணிந்திருப்பது அவருக்கு வருத்தமளித்தது. இந்த பிரச்சனைக்கு தட்பநிலையை கூட்டி எளிதில் தீர்வு கண்டுவிடலாம். முன்பு 18 செல்சியஸாக வைத்திருந்த தட்பநிலையை தற்போது 25ல் வைத்துக்கொள்கின்றனர்.
அதோடு, முன்பெல்லாம் சில அலுவலக பிரிவுகளில் குளிரூட்டி தினமும் இடைவிடாது இயங்கும் வழக்கம் இருந்ததாம். ஆனால், இனியும் இதற்கு தேவை இல்லை என்று முடிந்த அளவு ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் குளிரூட்டிகள் இயங்காமல் பார்த்துக்கொள்ளும் நோக்கம் கொண்டுள்ளதாக திரு எங் பகிர்ந்துகொண்டார். இதுவே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி கணிசமான அளவு எரிசக்தியை சேமிப்பதாகவும் கூறினார்.
மருத்துவமனைக்குத் தேவையான எரிசக்தியில் சிறிதளவு தாமே உற்பத்தி செய்து கொள்ள சூரியவொளித் தகடுகளை மேற்கூரைகளில் பொருத்தியுள்ளனர். இதைக் கொண்டு மருத்துவமனைக்கு தேவையான வெந்நீரை தயார் செய்கின்றனர்.
இவர்களை முன்னுதாரணமாக கொண்டு சிங்கப்பூரின் மற்ற மருத்துவமனை நிர்வாகங்களும் தம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தம் பங்கை ஆற்றலாம்.

