பழைய ரயில் பாதை இப்போது மக்களை இயற்கையுடன் இணைக்கிறது

2 mins read
ff58e290-3437-493a-806b-afc52f4a6cb4
ரயில் பாதையின் இயற்கையை ரசிக்க திரண்ட மக்கள் -

சிங்கப்பூரின் மையப் பகுதிவழி பயன்பாட்டில் இல்லாத ரயில் பாதை ஒன்று ஓடுகிறது. இது சிங்கப்பூரின் இயற்கை பாதுகாப்பு முயற்சிகளில் வெற்றிகரமான ஒன்றாகும்.

24 கிலோமீட்டர் நீள இந்த ரயில் தட பாதை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. வடக்கிலுள்ள சுங்கை புலோ வனப்பகுதியில் தொடங்கி தெற்குப்பகுதி வரை இணைக்கும் ஒரு பாதையாக இது அமைந்துள்ளது. இதை ஒரு பசுமை நடைபாதையாக உருமாற்ற சிங்கப்பூர் இயற்கை சமூகம் பரிந்துரைத்தது.

2012ல் முதன் முதலாக இந்த ரயில் நடைபாதை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. மக்களை ஈர்க்கும் வண்ணம், பாதையின் ஒரு பகுதியில் மரபுடைமை காட்சிக்கூடமும் உணவு வசதிகளும் உருவாக்கப்பட்டன.

சதுப்பு நிலங்களில் தொடங்கும் இந்த பாதை புக்கிட் திமா ரயில் நிலையம் வழி செல்கிறது. அங்கிருந்து, நாட்டின் மத்திய வணிக பகுதி வழி கடந்து சிங்கப்பூரின் மறு முனையான தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் முடிகிறது.

இந்த பசுமை பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கூடுதல் மேம்பாடுகளை காண இருக்கின்றது. அதனை சுற்றியுள்ள இயற்கை சூழலை பேணி காப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருவதாக தேசிய பூங்கா கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட இந்த இயற்கை பகுதியால் விலங்குகள் அதிக பயன் அடைந்துள்ளன. இடைவெளிகள் இல்லாத நீண்ட பகுதியாக இருக்கும் இதில் உள்ளூர் தாவரங்கள், விலங்கினங்கள் செழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை பாதையின் உயிர்ப்பிப்பு முயற்சிகளின் ஓர் அங்கமாக தேசிய பூங்கா கழகம் சுமார் 52,000 செடிகளையும் மரங்களையும் நட்டுள்ளது. மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு இவ்வனப்பகுதியின் பழைய செழிப்பை கொண்டு வர முயலும் நோக்கம் கொண்டுள்ளது கழகம்.