இவ்வாண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதியிலிருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு நெகிழி பைக்கும் குறைந்தபட்சம் 5 காசு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மார்ச் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டாக்டர் ஏமி கொர். நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, போக்குவரத்து அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சரான அவர், சிங்கப்பூரில் உள்ள சுமார் 400 பல்பொருள் அங்காடிகளில் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதை தெரிவித்தார்.
வள நிலைத்தன்மை மசோதாவின மூலம் சிங்கப்பூரில் உணவு, பொட்டல கழிவுகளின் அளவை குறைக்கஅரசாங்கம் விழைகிறது.
"ஒரு முறை பயன்படும் நெகிழி பைகளுக்கு கட்டணம் செலுத்துவதை கட்டாயமாக்கி, அவற்றை கவனமாக பயன்படுத்த வாடிக்கையாளர்களை வலியுறுத்துகிறோம்." என்று டாக்டர் ஏமி கொர் கூறினார்.
$100 மில்லியன் வருடாந்திர வருமானம் கொண்டுள்ள அங்காடிகளுக்கு இந்த புது கட்டாய விதி பொருந்தும். எனவே, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்.டி.யு.சி) ஃபார்பிரைஸ், ஷெங் ஷியோங் முதலிய அங்காடிகளில் நெகிழி பைகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
$100 மில்லியனுக்கும் குறைவாக வருடாந்திர வருமானம் கொண்ட அங்காடிகள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த கட்டண கட்டாயத்தை அமல்படுத்தலாம். சில அங்காடிகள் இவ்வாறு ஏற்கனவே செய்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொறுப்பான கட்டண அமலாக்கத்தை உறுதிப்படுத்த சில வழிமுறைகளும் நடப்பில் உள்ளன. கட்டணம் செலுத்தப்பட்ட நெகிழி பைகளின் எண்ணிக்கை, அவற்றின் விற்பனையால் திரண்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, ஆகியன குறித்த தகவல்களை அங்காடிகள் மக்களிடமும் அரசாங்கத்திடமும் தெரிவிக்க வேண்டும்.

