கிராஞ்சி தண்ணீர் மீட்பு ஆலையும் கிராஞ்சி புதுநீர் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையும் 2035க்குள் மறுசீரமைக்கப்பட உள்ளன. தெங்கா, சுங்காய் கடுட் முதலிய புதிய கட்டுமானங்கள் தண்ணீர் தேவைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கிராஞ்சி தண்ணீர் ஆலையங்களின் சுத்திகரிப்பு செயல்திறனை மேம்படுத்த மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படவுள்ளன.
1980களில் கட்டப்பட்ட கிராஞ்சி தண்ணீர் மீட்பு ஆலை சிங்கப்பூரின் வடக்கிலுள்ள வூட்லண்ட்ஸ், சுவா சூ காங், சுங்காய் கடுட் முதலிய பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்புகிறது.
புது தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி தற்போது உள்ள சுத்திகரிப்பு முறையை விட சிறந்த ஒரு செயல்முறையை பின்பற்ற முயல்கின்றது இந்த ஆலை.
கிராஞ்சி தண்ணீர் மீட்பு ஆலை, கிராஞ்சி புதுநீர் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை இரண்டும் பாதாளச்சுரங்கச் சாக்கடை முறையின் மூலம் சாங்கி தண்ணீர் மீட்பு ஆலையுடனும் துவாஸ் தண்ணீர் மீட்பு ஆலையுடனும் இணைக்கப்பட்டு சிங்கப்பூரின் தண்ணீர் மீட்பு கட்டமைப்பை முழுமையாக்கவுள்ளன. இதன மூலம் தண்ணீர் தேவைகளுக்காக மலேசியாவை முழுதாக நம்பாமல் சுயமாக தன்னை கவனித்துக்கொள்ளும் ஆற்றலை சிங்கப்பூர் வளர்க்க முயல்கிறது.
தற்போது சிங்கப்பூரின் தண்ணீர் தேவைகளை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யபடும் நீர் 40% அளவில் பூர்த்தி செய்கிறது.
ஆனால், சிங்கப்பூர் மலேசிய நீர் சர்ச்சை மோசமடையும் சூழலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது கட்டாயமாகிறது.
ஆகையால், சிங்கப்பூர் தனது தண்ணீர் தேவைகளுக்கு ஏற்ப உள்ளூரிலே நீர் வளத்தை அதிகரிப்பதில் சில ஆண்டுகளாக உழைத்து வருகிறது. இந்த திட்டத்தின் விரிவாக்கம் எதிர்வரும் தண்ணீர் தேவைகளின் அதிகரிப்பை முன்னிட்டு தொடரும்.

