மரபையும் பண்பாட்டையும் காக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்

மரபையும் பண்பாட்டையும் காக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்

2 mins read
a823feea-5b41-4883-ae66-040fb4a46bb7
-

இன்றைய நவீன உலகில் எனக்கு எதற்கு இந்த பழைய மரபும் பண்பாடும் என்று கேட்கும் பலர் இருக்கையில் இது எனது அடையாளம் என்று பெருமையாய் இருக்கும் பலரைக் கண்டால் மனம் குளிரும்.

அண்மையில் நடந்தேறிய தைப்பூச திருவிழாவில் மக்கள் வெளிப்படுத்திய உற்சாகமும் பக்தியும் சிங்கப்பூர் தமிழர்கள் பேணிக்காக்கும் மரபையும் பண்பாட்டையும் உணர்த்துகிறது.

தைப்பூச ஊர்வலத்தில் ஏறக்குறைய 35,000 மக்களுக்கும் மேல் கலந்துகொண்டனர் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.

சக்கர நாற்காலியைச் சார்ந்து வாழும் திரு திருநாவுக்கரசு சுந்தரம் பிள்ளை தம் தம்பி, தம்பி மகனுடன் காவடி ஏந்தினார். தமது சக்கர நாற்காலியை அதிக எடை தாங்கக்கூடிய வகையில் சிறப்பாக மாற்றியமைத்து 30 கிலோகிராம் எடையுள்ள அலகு காவடியை அவர் தூக்கினார்.

பெரியோர்கள் மட்டுமல்லாது இளையர்களும் இத்திருவிழாவில் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தம் தந்தையுடன் காவடி எடுத்தார் 24 வயது உளவியல் மாணவர் அஸ்வந்த் தனராஜ். பல ஆண்டுகளாக இவரின் தந்தை வேண்டுதலை நிறைவேற்ற காவடி ஏந்துவது உண்டு. இவ்வாண்டு தந்தையுடன் சேர்த்து திரு அஷ்வந்த்தும் இணைந்துகொண்டார்.

மனமகிழ்ச்சி அளிக்கும் வகையில் சிறுவர்களும்கூட தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டனர். பல சிறுவர்கள் சின்ன பால் குடங்களைச் சுமந்து நடந்து சென்றது காண்பதற்கே அழகாய் இருந்தது.

இது போன்ற காட்சிகள் சிங்கப்பூரில் நம் தமிழினத்தவர்கள் மரபையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினரிடம் சேர்க்க எடுத்து வரும் முயற்சிகளை காட்டுகிறது. இளமையில் தொடங்கிவிடும் இக்கல்வி பெரியோர் ஆனபின்பும் அவர்களின் மனதில் நிலைக்கும் பாடங்களாக இருக்கும்.