மரபும் பண்பாடும் வளர உதவும் தமிழ் மொழி விழா

மரபும் பண்பாடும் வளர உதவும் தமிழ் மொழி விழா

2 mins read
1315df36-0bc1-4fbd-bbb8-3fc1ff65c197
-

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறும் தமிழ் மொழி விழா தமிழ் மொழியை வளர்ப்பதோடு தமிழர் மரபையும் பண்பாட்டையும் சேர்ந்து புகட்ட உதவுகிறது.

இவ்வாண்டு புது கருப்பொருளுடன் தமிழ் மொழி விழாவைக் கொண்டாட வளர்தமிழ் இயக்கம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. உயிராய் கருதும் தமிழைக் கொண்டாட உயிர் எழுத்தின் முதல் எழுத்தான "அ" வரிசையில் தொடங்கும் ஒரு சொல்லை கருப்பொருளாக தேர்ந்தெடுத்துள்ளது வளர்தமிழ் இயக்கம்.

2023ஆம் ஆண்டின் தமிழ் மொழி விழாவின் கருப்பொருள் "அழகு" என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் மொழியை வாழும் மொழியாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருக்கும் வளர்தமிழ் இயக்கம் தமிழ் மொழி மாதம் முழுவதும் தீவின் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி தமிழரின் மொழிப் பெருமையை கொண்டாடுகிறது.

இந்நிகழ்ச்சிகள் நமது மரபையும் பண்பாட்டையும் வலியுறுத்தும் அம்சங்களையும் கொண்டுள்ளன. தமிழர்களின் உணவு முறை, பாரம்பரிய விளையாட்டுகள், நடனங்கள், வரலாறு போன்ற பலவற்றை மக்களுக்கு, குறிப்பாக இளையர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறது தமிழ் மொழி விழா.

ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் கலந்து கொள்ள பல போட்டிகளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இலக்கியம் சார்ந்த கட்டுரை போட்டிகள், கவிதை போட்டிகள் என்று இளைஞர்கள் பங்குபெற்று பரிசுகள் பெற பல வாய்ப்புகளை வழங்குகிறது.

தமிழர்களின் வாழ்வில் தமிழ் மொழியும் மரபும் இணைந்தபடியே இருக்கும். ஆகையால் இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியுடன் மரபையும் பண்பாட்டையும் சேர்த்து கற்றுக் கொடுத்தால் அவர்கள் வளர வளர அவர்களுக்குள் இருக்கும் தமிழர் பற்றும் வளர்ச்சி காணும்.