பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த முதல் சீன பெண் குமாரி சூ மெய் ஃபெய், தமது பயணத்தை உயர்நிலை ஒன்றில் தொடங்கினார். தேசிய தொடக்கக் கல்லூரியின் இந்திய நடன குழு வகுப்புகளுக்கு சென்று ஒரு கை பார்க்கலாம் என்று எண்ணிய குமாரி சூ, அக்கலையில் ஆர்வம் ஏற்படவே கலைப்பள்ளியில் இணைந்து முறையாக கற்க தொடங்கினார்.
தமது 23ஆம் வயதில் அரங்கேற்றம் முடித்த சூ அவையோரின் பாராட்டுகளை பெற்று அனைவரையும் கவர்ந்தார். அயராது நடனக்கலையை பயிற்சி செய்யும் மெய் ஃபெய் தமது கடின உழைப்பால் குருவிற்கு சிறந்த மாணவராக விளங்கினார்.
இந்திய கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டிருக்கும் இவரை போலவே, தமிழில் ஆர்வம் கொண்டுள்ளார், லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு பூக்கடையில் 14 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் திரு சிய டோங். இவர் சரளமாக தமிழ் பேசக்கூடியவர்.
2008ல் சிங்கப்பூருக்கு வந்த திரு சியவிற்கு சீன மொழி மட்டுமே பேச தெரிந்திருந்தது. அவருக்கு ஆங்கிலமும் பேச தெரியாது. இருந்தும், இவரை நம்பி தம் பூக்கடையில் வேலைக்கு சேர்த்தார் திரு சியவின் முதலாளி.
மொழி மிக பெரிய தடையாக இருந்ததால் சைகையிலேயே வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டார் சிய. அதே சமயத்தில் சிய தினமும் தமிழ் திரைப்படங்கள் பார்த்து தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். மொழியுடன் நின்றுவிடாமல் தமிழர்களின் பண்பாட்டையும் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
தைப்பூசம் திருவிழாவில்கூட சீனர்கள் சிலர் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்து கோயில் தரிசனத்தில் ஈடுபட்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தமிழர்களின் பல அம்சங்கள் வேற்று மொழி பேசுபவர்களை எளிதாக ஈர்க்கிறது. நமது மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றில் இவர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே நமது மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையை உணர்த்துகிறது.