நிபுணர்களை மின்னிலக்க காலத்திற்காக தயார்ப்படுத்தும் கழகம்

நிபுணர்களை மின்னிலக்க காலத்திற்காக தயார்ப்படுத்தும் கழகம்

2 mins read
6c7e2b64-506c-499a-9298-a936493cb8d0
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கட்டமைப்பு கல்வி கழகம் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. -

மின்னிலக்க தொழில்நுட்ப துறைகளில் முதன்மை வகிக்கிறது சிங்கப்பூர். இதில் பெரும் பங்களித்துள்ளது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு கல்வி கழகம் (NUS-ISS).

1981ல் துவங்கப்பட்ட கட்டமைப்பு கல்விக்கழகம் சிங்கப்பூர் நிபுணர்களுக்கு மின்னிலக்க திறன்களை வளர்க்க உதவி நல்கும் கழகமாய் திகழ்கிறது. இன்று இந்த கழகம் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மின்னிலக்க தலைமைத்துவம், மென்பொருள் மேம்பாடு முதலிய பல வகையான பயிற்சிகளை வழங்குகிறது.

கல்வி வாய்ப்புகள் தருவதோடு ஆராய்ச்சிகள் நடத்தியும் ஆலோசனை சேவைகள் வழங்கியும் நிறுவனங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப தம்மை மாற்றியமைத்துக் கொள்ள உதவுகிறது.

தேசிய பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு கல்வி கழகம் பல மின்னிலக்க தலைவர்களையும் நிபுணர்களையும் உருவாக்கியுள்ளது. அதோடு அவர்களுடைய மின்னிலக்க திறனை கண்டறிந்து அதை மெருகேற்ற உறுதுணையாக இருந்துள்ளது.

பல இதர நிறுவனங்களுடன் கைகோர்த்த கழகம், மின்னிலக்க துறையில் கல்வி, பயிற்சி வாய்ப்புகளை தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தி தந்துள்ளது.

இக்கழகம் சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து மின்னிலக்க கழகம் ஒன்றை துவங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் தம் வாழ்க்கைத்தொழிலில் வளர்ச்சி காணவும் இலக்குகளை அடையவும் உறுதுணையாய் இருப்பதாக அது கூறியது.

கழகத்தின் புது சின்னத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதிபர் ஹலீமா யாகோப்.

"இக்கழகம் இந்நாள் வரை ஏறத்தாழ 166,000 மின்னிலக்க தலைவர்களையும் நிபுணர்களையும் உருவாக்கியுள்ளது. மேலும், 8000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடனும் இணைந்து துறை சார்ந்த திறன்களை அவர்களுள் வளர்த்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து ஆசிய நாடுகள் மத்தியில் நம்மை ஓர் அனுகூலமான நிலைமைக்கு உயர்த்தியுள்ளனர்" என்று அவர் கழகத்தை பாராட்டினார்.