உயர்நிலைப் பள்ளிக்கு சென்ற சிறுமி நுரின் அகிஷா கமர்னொர் பள்ளியின் தொழில்நுட்ப குழுவால் ஈர்க்கப்பட்டார். ஆனால், அவருடைய வகுப்பிலுள்ள ஆண் மாணவர்கள் தொழில்நுட்பம் என்பது பெண்களுக்கு அல்ல என்று கூறி கேலி செய்தனர்.
நார்த்லேண்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் நுரின் இதைக் கேட்டவுடன் சற்று உற்சாகம் இழந்தார். இருப்பினும், பைட்.எஸ்ஜி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட நுரின் மற்றவர் கூறுவதை கேட்காது தனது விருப்பங்களில் தொடர்ந்து ஈடுபட தன்னம்பிக்கை பெற்றார்.
நிபுணத்துவம் பெற்ற புகைப்பட கலைஞர் ஆக விரும்பும் நுரின் இப்போது சில இணைய விளையாட்டுக்களை எளிதாக உருவாக்குகிறார். பைட்.எஸ்ஜியின் தொழில்நுட்ப ஆய்வுகூட திட்டத்தில் பங்கேற்ற 110 பயனாளிகளில் நுரினும் ஒருவர். இத்திட்டம் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் 7 - 12 வயதுள்ள சிறாருக்கு மின்னிலக்க அறிவை கொண்டு சேர்க்கிறது.
வாடகை வீடுகளில் வாழும் இவர்களுக்கு எளிதில் சாதனங்கள் கிட்டுவதில்லை. இதனால், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், கணினி முதலிய தொழில்நுட்ப சாதனங்களை திறம்பட பயன்படுத்துவதில் சற்று பின்தங்கியே உள்ளனர். இதுபோன்ற தடைகளைத் தாண்டி சிறுவர்கள் தம் திறன்களை வளர்த்துக் கொள்ள துணை புரிகிறது பைட்.எஸ்ஜி
2021ல் அதிபர் ஹலிமா யாகோப்பால் தொடங்கப்பட்ட இத்திட்டம் வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்கத்தின் நிதி ஆதரவை பெற்றுள்ளது. இது சிங்கப்பூரர்களின் வாழ்வை மெருகேற்ற உதவும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் முதலிய பல அமைப்புகளுடன் இணைந்துள்ள பைட்.எஸ்ஜி 6 இடங்களுக்கு சென்றுஇத்திட்டத்தின் மூலம் பிள்ளைகளுக்கு உதவியுள்ளது.
பின்தங்கிய மாணவர்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வகுக்கப்பட்ட பாடத்திட்டங்களைக் கொண்டு உதவினர். இத்திட்டம் 48 வாரங்களுக்கு நீடித்தது.

