ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட கடலுணவு

2 mins read
fe36286f-fd9a-4c9c-b4d2-9d862fee1759
-

குருத்தணு (stem cell) ஆராய்ச்சி கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் அதிவேகத்தில் இடம்பெற்று வருகிறது. இதுவரை, ஆய்வுகூடத்தில் தயாரான கோழி இறைச்சி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும் இம்முறையில் யாரும் கடலுணவுகளை தயாரிக்கவில்லை.

இதை கண்ட குருத்தணு அறிவியலாளர் சந்தியா ஸ்ரீராம் தம்மிடம் இருந்த அறிவை உபயோகித்து ஆய்வுகூட கடலுணவை தயாரிக்க முடிவெடுத்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு "ஷியோக் மீட்ஸ்" (Shiok Meats) என்ற பெயரில் தம் நிறுவனத்தை ஆவலுடன் பதிவு செய்தார்.

"ஆசிய நாடுகளை சேர்ந்தோர் அதிகம் உண்பது கடல் உணவை தான். அவை மிகவும் சுவையானவையும் கூட. எனவே கடலுணவை பிரத்தியேகமாய் தயாரிப்பது சுலபமான முடிவாக தான் இருந்தது," என்று சந்தியா டைம் நாளிதழிடம் (Time magazine) பகிர்ந்துகொண்டார்.

ஆவலுடன் தொடங்கிய நிறுவனம் இன்று சிங்கப்பூரில் பெருமளவில் வளர்ந்துள்ளது. "ஷியோக் மீட்ஸ்" நிறுவனம் இதுவரை இறால், நண்டு வகைகளை சேர்ந்த கடலுணவுகளின் மாதிரியை தயாரித்துள்ளது. இவற்றை விற்பனைக்கு கொண்டு வர இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனுமதி பெற திட்டமிட்டுள்ளது.

இது கைகூடினால், ஆய்வுகூடத்தில் தயாரான இறாலை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் உலகின் முதல் நிறுவனமாக "ஷியோக் மீட்ஸ்" இடம்பிடிக்கும். தற்போது விற்பனைக்கு அனுமதி பெற்று சிங்கப்பூரில் மட்டும் விற்கப்படும் ஆய்வுகூட கோழிக்கறி "ஈட் ஜஸ்ட்" (Eat Just) நிறுவனத்திற்குச் சொந்தமானது.

பொதுவாக, பண்ணைகளில் இருந்து பெறப்படும் ஓட்டுமீன்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு வளர்க்கப்படுவதில்லை என்ற ஐயங்கள் சிலருக்கு இருக்கலாம். ஆய்வுக்கூட இறால்களை இவர்களைக் கண்டிப்பாக ஈர்க்கும் என்றார் சந்தியா.

எதிர்காலத்தில், அனைவரும் விரும்பி உண்ணும் ஆய்வுக்கூட கடலுணவு வகைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நோக்கம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.