மனிதர்களின் வாழ்வை மெருகேற்றுவது மொழி. பிறருடன் உரையாடுவதற்கு மொழி இன்றியமையாதது. ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பிப்ரவரி 21ஆம் தேதியை அனைத்துலக தாய்மொழி தினமாக 2000ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்நாள் பல்வேறு உலக சமூகங்களைக் கொண்டாடுகிறது.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உலகின் ஒரு மொழி அழிகிறதாக கூறுகிறது ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு. தற்போது உள்ள ஏறக்குறைய 7000 வாழும் மொழிகளில் கிட்டத்தட்ட 3000 மொழிகள் அருகிவரும் நிலையில் உள்ளன.
இந்தியாவின் பழங்குடி மக்களின் மொழிகள் பல, அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் மற்ற மொழிகளும் இதே நிலையை எதிர்நோக்க கூடும்.
முன்பு புலம்பெயர்தல் குறைவாக இருந்ததால் தாய்மொழி பயன்பாடு அதிகளவில் இருந்தது. இன்றைய உலகமயமாதல் சூழலில் ஆங்கில மொழி ஒரு அத்தியாவசியமாக உருமாறியுள்ளது. வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சிதறிய மக்கள் ஆங்கில புழக்கத்தில் ஆழ்ந்துவிட்டதால் தாய்மொழியில் உரையாடுவது மெல்ல மெல்ல குறைந்தது.
இன்று பலர் தம் தாய் மொழியில் எழுத படிக்க தெரியாமல் உள்ளனர். தாய் மொழியில் இலக்கியவாதியாக இருக்க வேண்டியதில்லை, ஆனால், எழுத படிக்க தெரியாமல் இருப்பது இழிவு என்பதை உணர்த்த உலகளவில் பலரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
ஆங்கிலம் போதுமே வாழ்வதற்கு என்று சிலர் கூறுவர். ஆனால், வாழ்வதற்கு தேவையானவை அனைத்தும் கிட்டியும் திருப்தி அடையாத மனிதன் மொழிக்கு மட்டும் இந்த நோக்கம் கொள்ளலாமா?
மேலும், இளமையிலிருந்து தாய்மொழி உள்ளிட்ட பலதரப்பட்ட மொழிகளைக் கற்பது பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
ஆகவே, இன்றுள்ள நிலை நாளையும் தொடராது பார்த்துக்கொள்வது ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பையும் பொறுத்தது. இனியும் எந்த மொழியையும் இழக்காமல் இருப்பது அவசியம்.

