கல்வி என்பது எல்லா காலத்திலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. பழங்காலத்தில் கல்வி பெற்றவர்கள் குறைவாக இருந்தனர். பல இன்னல்களை கடந்து ஆசிரியர்களைத் தேடிச் சென்று கல்வி கற்று வரவேண்டியிருந்தது.
காலப்போக்கில் கல்வி முறை மேம்படுத்தப்பட்டது. கல்வி கற்ற மக்கள் கொண்ட தேசமே முன்னேற்ற பாதையில் செல்லும் என்றறிந்த அரசாங்கங்கள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பள்ளிகளை எழுப்பி பாலர்களை பள்ளிக்கூடம் அனுப்ப ஊக்குவித்தனர்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடையவே மின்னிலக்க பயன்பாடு வகுப்புகளில் அதிகரித்தது. அண்மைய கொவிட்-19 கிருமித்தொற்று இத்தகைய தொழில்நுட்ப பயன்பாட்டை பாடமுறையில் பெருமளவில் கூட்டியது.
நிலையற்ற, தொடர் மாற்றங்கள் நிறைந்த 21ஆம் நூற்றாண்டிற்கு மாணவர்களை தயார் செய்ய கல்வி முறை மீண்டும் பரிசீலனை கண்டு மாற்றம் நிகழ வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.
ஏட்டு கல்வி மட்டும் வாழ்வில் சாதிக்க போதாது என்ற உண்மையை மீண்டும் மீண்டும் இவ்வுலகம் நினைவூட்டுகிறது. ஆகையால், வாழ்க்கை திறன்களை வளர்க்கும் கல்வி மாணவர்களுக்கு கிட்டுவது மிக முக்கியம்.
வகுப்பின் முன் நின்று ஆசிரியர்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதால் மட்டும் மாணவர்கள் பயனடைவர் என்ற நிலை தற்போது இல்லை என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்று அறிவுறுத்தியுள்ளது. உலகில் எத்தனையோ வழக்கங்கள் மாறிவிட்டாலும் கல்வி முறை இன்னும் காலத்துக்கு ஏற்ப மாறவில்லை என்று அது கருத்து தெரிவித்தது.
குழு கலந்துரையாடல்கள், குழுவுணர்வு, மாணவர்களின் சுய சிந்தனைகள் நிறைந்த ஒரு வகுப்பு பிள்ளைகளின் சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும். சுயமாக சிந்திக்கும் அவர்கள் ஆசிரியர்களே தகவல்களையும் பாடத்தையும் புகட்டுவர் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதைத் தவிர்க்க இவை உதவும்.
மேலும், மெய்நிகர் தொழில்நுட்பம், மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனிப்பு முதலியவையும் இடம்பெறுவது பயனளிக்க கூடும். உலக அனுபவங்களை வகுப்பிலிருந்தே மாணவர்கள் பெறுவதற்கு மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் உதவக்கூடும்.
பல மாற்றங்கள் ஏற்படுகையில், அவற்றை சாதகமாக பயன்படுத்தி அறிவை வளர்க்க முற்படுவது நல்லது. அதை விடுத்து, தீய நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்துவது முறையன்று.

