அறிவார்ந்த தேச திட்டங்களுக்கு வேகமூட்டிவரும் சிங்கப்பூரில் விண்வெளி சார்ந்த தொழில்நுட்பத் தேவைகள் அதிகரிக்கின்றன.
பல துறைகளுக்கு உதவியாக விண்வெளி தொழில்நுட்பங்கள் திகழ்கின்றன. சிங்கப்பூரின் மின்னியல் சாலைக் கட்டண முறை உலகளாவிய போக்குவரத்துத் துணைக்கோளத் திட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் போக்குவரத்து மேலாண்மை, திட்டமிடல் ஆகியவை செவ்வனே நிறைவேறுகின்றன.
சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து ஆணையம் இது போன்ற பயன்பாடுகளை விரிவுபடுத்த திட்டங்கள் கொண்டுள்ளதாக கூறியது. பரந்த நிலவியல் தகவல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் அறிவார்ந்த தேச திட்டத்தின் முயற்சிகளை விரைவுபடுத்த அரசாங்கம் முயல்கிறது.
அதோடு, சிங்கப்பூரர்களின் தினசரி வாழ்வில் அதிகம் உபயோகமாகும் பயன்பாடுகளில் கவனம் செலுத்துவது நல்ல பயன் தரும் என்று சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் கூறினார்.
விண்வெளி தொழில்நுட்பத்தை கொண்டு நீடித்த நிலைத்தன்மையிலும் பல முன்னேற்றங்களை கொண்டு வர முடியும். இது கடல் மட்டத்தைக் கண்காணிப்பதற்கு பேருதவியாக இருப்பதுடன், உயரும் கடல் மட்டத்திற்கு ஏற்ற பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு கைகொடுக்கிறது.
சிறிய நாடான சிங்கப்பூரின் வரைபடத்தை துல்லியமாக வடிவமைப்பதற்கு தொழில்நுட்ப வளங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன.
அறிவார்ந்த தேச திட்டங்களின் முக்கிய அங்கம் ஓட்டுநரில்லா வாகனங்கள். அவை உலகளாவிய போக்குவரத்துத் துணைக்கோளத் திட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தொழில்நுட்பம் இன்றி ஓட்டுநரில்லா வாகனங்கள் நம் சாலைகளில் இயங்க இயலாது.
இந்த துறையில் இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க புதிய விண்வெளி வேலை அனுபவத் திட்டம் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பல வாய்ப்புகள் பெற்று துறைக்கு தம் பங்கேற்ற நிபுணர்களின் ஆலோசனையும் பெறுவார்கள்.

