சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தின் உபயோகத்தை அனுமதிக்கும் அனைத்துலக இளங்கலை (IB)

சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தின் உபயோகத்தை அனுமதிக்கும் அனைத்துலக இளங்கலை (IB)

2 mins read
d8f57f29-6266-4f10-8ffc-c2186a722da2
படம்: ஏஎஃப்பி -

அனைத்துலக இளங்கலை (IB) கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் தமது பள்ளி பாட வேலைகளுக்கு சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தின் உதவியை நாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சாட்ஜிபிடி தொழில்நுட்பத்திலிருந்து பெற்ற அனைத்து தகவல்களையும் சரியான முறையில் தமது கட்டுரைகளில் சான்றளித்து குறிப்பிட வேண்டும் என்று அனைத்துலக இளங்கலையின் தலைமையகம் தெரிவித்தது.

"செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் பயன்பாட்டை தடை செய்வது சரி அல்ல. புது கண்டுபிடிப்புகளை கையாளும் முறையான வழி அதுவல்ல. அவற்றை சரியான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுத்தருவது அவசியமாகிறது." என்று அனைத்துலக இளங்கலை அமைப்பின் பேச்சாளர் ஒருவர் விளக்கம் அளித்தார்.

கணிப்பான், மொழிபெயர்ப்பு வசதிகள் போலவே இன்னும் சில ஆண்டுகளில் சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்ப வசதிகளும் தினசரி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று கூறிய பேச்சாளர், இத்தொழில்நுட்பங்களை தவறான வழிகள் உபயோகிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மாணவர்கள் சுயமாக தயாரிக்காத, இணைய வசதிகளிலுருந்து பெற்ற தகவல்களுக்கு முறையாக பொறுப்பேற்று தமது படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக கருத்து திருட்டில் ஈடுபடாமல் இருப்பதை மாணவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட சாட்ஜிபிடி ஜனவரி மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 13 மில்லியன் பேர் தினமும் பயன்படுத்தியதாக அறிவிக்கப்பட்டது.

மாறிவரும் உலக சூழல்களுக்கு ஏற்ப கல்வி திட்டங்களை மாற்றியமைத்து காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது அவசியமாகிறது. தொடர்ந்து நிபுணர்களுடன் கலந்துரையாடி சிறந்த முடிவுகளை எடுக்க சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்துலக இளங்கலை (IB) கல்வி திட்ட மையம் முயலும் என்று அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.