பணவீக்கத்தால் பாதிப்படையாமல் தப்ப தனிப்பட்ட நிதியறிவு முக்கியம்

பணவீக்கத்தால் பாதிப்படையாமல் தப்ப தனிப்பட்ட நிதியறிவு முக்கியம்

2 mins read
6a05c5a3-2aef-4bc9-b821-582cfc704a26
-

பணவீக்கம் அனைத்து ரக மக்களையும் பாதிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன் இரண்டு வெள்ளிக்கு பெற கூடிய 10 முட்டைகள் இன்று $3.50. சிங்கப்பூரின் மொத்த பணவீக்கம் சென்றாண்டு 6.7 விழுக்காடாக இருந்தது. இந்த புள்ளிவிவரம் குறையப் போவதில்லை என்பது நிபுணர்களின் கருத்து.

"இதுபோன்ற பணவீக்க நிலையில் மிக கவனமாக இருக்கவேண்டும். அதற்கு நிதியறிவை மேம்படுத்திக் கொள்வது அவசியம். நிதியறிவு ஒரு முக்கியமான வாழ்க்கை திறன். நம் தனிப்பட்ட நலனில் இத்திறன் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று குமாரி லோர்னா டான், டிபிஸ் (DBS) வங்கியின் நிதித்திட்ட அறிவு தலைவர் கூறினார்.

நிதி அறிவில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன. இவை, வரவு செலவு திட்டம், சேமிப்பு, முதலீடு ஆகியன.

மாதாந்திர செலவுகளை கணக்கெடுத்து வரவு செலவுகளை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எதில் அதிக செலவுகள் ஏற்படுகின்றன என்ற புரிதலை கொண்டிருக்கும்போது செலவுகளை கட்டுப்படுத்துவது எளிதாகிறது.

வரவு செலவுகளை தீர்மானித்ததன் பின் சேமிப்பில் போதிய அளவை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்பாராத பிரச்சினைகள் ஏதேனும் நேர்ந்தால் அவற்றை சமாளிப்பதற்கான தன்னபிக்கையை சேமிப்பு தரும்.

எப்போதும் மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகளை சமாளிக்க தேவையான அளவு சேமிப்புகள் கொண்டிருப்பது நல்லது என்று குமாரி டான் சிஎன்ஏ (CNA) செய்தியிடம் குறிப்பிட்டார்.

போதிய சேமிப்பு இருக்கும்போது முதலீட்டில் கவனம் செலுத்துவது பெரும் பலன்களை ஈட்டித்தரும். பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து நம்மை பெரிதும் காப்பது முதலீடுகளே. முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. அறியாமையில் முதலீடு செய்வது இழப்பில் முடியும். நன்கு ஆராய்ந்த பிறகு முதலீடுகளில் ஈடுபட்டால் அதற்குரிய பலன்களை நாம் ஈட்டலாம் என்றும் டான் கூறினார்.

நிதியறிவிலும் வாழ்நாள் கற்றல் இருக்க வேண்டும். மாறிக்கொண்டே இருக்கும் பொருளியல் சூழல்களுக்கு ஏற்ப நிதி முடிவுகள் எடுக்க இத்தகைய அறிவு உதவும்.