ஓய்வுபெற்ற பொறியியலாளர் திரு சூ பூன் ஹாக் இணைய வங்கி கணக்கு ஒன்றினை வைத்துள்ளார். அதை ஒரு முறை பயன்படுத்த முயன்ற அவர், வெவ்வேறு இடங்களில் இருந்த விசைகளை பயன்படுத்த தெரியாமல் விரக்தி அடைந்தார். இதனால், இணைய வாங்கி முறையை அறவே வெறுத்துவிட்டார். அவசர நிதி பரிமாற்றத்திற்கு மட்டும் தன் மகனை நாடும் திரு சூ பொதுவாக வங்கிக்கு சென்றுதான் எந்த வங்கி அலுவல்களையும் மேற்கொள்வார்.
இவரைப் போலவேத்தான், இல்லத்தரசியாக இருக்கும் திருமதி சிட்டியும். "வங்கிக்கு நேரில் சென்றால்கூட அலுவலர் பல முறை விளக்கம் கொடுத்தால் மட்டுமே எனக்கு புரிகிறது. இப்படி இருக்க, நான் எப்படி தானியக்க பணம் செலுத்தும் இயந்திரத்துடன் (ATM) போராடுவது?" என்று சிஎன்ஏ (CNA) செய்தியிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.
மூத்தோர் பலர் இவர்களை போலவே மின்னிலக்கமயமாதலுடன் சிரமப்படுகின்றனர். கொவிட்-19 காலகட்டத்தில் மின்னிலக்க வங்கி முறைக்கு அதிவேகமாய் மாறியதால் தங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றும், தாங்கள் பின்தங்கிவிட்டதாய் உணர்வதாகவும் டுடே செய்தி நேர்காணலிட்ட முதியோர் குறிப்பிட்டனர்.
தேவை கருதி மின்னிலக்க முறைக்கு மாறியுள்ள முதியவர்களும் உள்ளனர். இருப்பினும், இவர்கள் மிக தயக்கத்துடனும் பயத்துடனும்தான் இம்முறையை பயன்படுத்துகின்றனர்.
முதியவர்களுக்கு உதவுவதற்கு பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுத் தருவதோடு வாழ்நாள் காற்றலையும் அவர்களிடம் இத்திட்டங்கள் வலியுறுத்துகின்றன. முதியோர் நவீன மின்னிலக்க இயக்கங்களை அறிந்துகொள்வதில் சிரமங்கள் எதிர்கொள்வது இயல்பே. ஆனால், காலத்துடன் மாறி தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உத்வேகம் இருந்தால் எளிதாக பல செயல்முறைகளை அவர்கள் கற்றுக்கொள்ள இயலும்.
ஆகவேதான் அரசாங்கமும் வாழ்நாள் கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அனைவருக்கும் அதை வலியுறுத்துகிறது.

