சிங்கப்பூர் இளைஞர்களுக்கு தன்முனைப்பும் தலைமைத்துவ திறன்களும் குறைவாக உள்ளதாம்

சிங்கப்பூர் இளைஞர்களுக்கு தன்முனைப்பும் தலைமைத்துவ திறன்களும் குறைவாக உள்ளதாம்

2 mins read
8c3f7aab-de37-465c-b773-823deb7d0af4
பல்வேறு அம்சங்கள் தொட்டு கலந்து உரையாடிய இளையர் பிரிவினர். (படங்கள்: தமிழர் பேரவை இளையர் பிரிவு) -

திறன்பேசிகளுடன் வளரும் இன்றைய சிறுவர்கள் பிறருடன் நேருக்கு நேர் பேசுவதில் சிரமப்படுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. சில சிறுவர்கள் பிறரிடமிருந்து விலகி, தனிமையில் இருப்பதாகவும் உணரக்கூடும்.

"பள்ளி முடிந்து வீடு செல்லும் சிறுவர்கள் இணையம், கணினி விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் மூழ்கிவிடுகின்றனர். இதனால் மென் திறன்களை வளர்க்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளன," என்று மருத்துவர் ஆங் சே ஹௌ கூறுகினார்.

வெற்றிகரமாய் வாழ்க்கை பாதையில் குறுக்கிடும் இன்னல்களை சமாளிக்க மிகவும் உதவுவது மென் திறன்களே. இவை பள்ளிகளில் வெளிப்படையாக கற்றுத்தரப்படுவதில்லை. இருப்பினும், அறிவுபூர்வமான சிந்தனை, பிரச்சினைகளை திறம்பட தீர்ப்பது முதலிய மென் திறன்கள் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை.

முன்னாள் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஃபாயிசா சிராஜூடின் இளம் தலைமுறையின் மென் திறன்களை வளர்த்து அவர்களை எதிர்காலத்திற்காக தயார்செய்ய வேண்டும் என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

தமது அனுபவத்தில், சிங்கப்பூர் மாணவர்களிடம் பொதுவாக தன்முனைப்பும் தலைமைத்துவ திறன்களும் குறைவாக இருப்பதாக கவனித்ததாக அவர் கூறினார். இத்திறன்களை வளர்த்துக் கொள்ளாவிடில் சுற்றி நடப்பவைக்கு ஏற்ப நடந்துகொள்வார்களே தவிர அவர்கள் சுயமாக சிந்திக்கமாட்டார்கள். ஆகையால், பெற்றோர் பிள்ளைகளை சுய முடிவுகள் எடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர். அப்போதுதான் அவர்கள் முடிவெடுப்பதற்குரிய தன்னம்பிக்கையை பெறுவர்.

'ஃபேஸ் தி ஃபியூச்சர்' என்னும் நிறுவனத்தை தொடங்கிய ஆசிரியர் சிராஜூடின், விளையாட்டுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பிள்ளைகளின் மென் திறன்களை வளர்க்க முயல்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சிகளின் நன்மைகளை அனுபவிக்கும் இளம் தலைமுறையினர் மென் திறன்களும் குண வளர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம்.