நிதியறிவை கற்றுக் கொடுப்பது சிறு வயதிலிருந்தே தொடங்கலாம். நிதி சார்ந்த ஆரம்ப கல்வி நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ள உதவும். பணத்தின் மதிப்பை சிறுவர்கள் புரிந்து கொண்டு பொறுப்புடன் செலவுகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்தலாம். டுடே செய்தியுடன் கலந்துரையாடிய டிபிஎஸ் வங்கியின் நிதித்திட்ட அறிவு தலைவர் குமாரி லோர்னா டான், சிறுவர்களுக்கு பணத்தின் மதிப்பை கற்றுத்தருவது குறித்த ஆலோசனையை பகிர்ந்துகொண்டார்.
பண்டிகை காலங்களில் பரிசாக பெறப்படும் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை வலியுறுத்துவது நல்லது. சிறிதளவு பணத்தை பயன்படுத்த எண்ணினால், எவ்வாறு பணத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது என்பதையும் கற்றுத் தரலாம்.
கடைகளுக்கு அழைத்து சென்று பெற்றோர் எவ்வாறு பொருட்கள் வாங்குகிறார்கள், மீதம் பெறும் பணம் சரியாக உள்ளதா என்பதை எவ்வாறு சரி பார்க்கின்றனர் முதலிய பழக்கங்களை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். பொருட்களின் விலையை கணக்கிடச் சொல்லி அவர்களுக்கு உதவலாம்.
தேவைப்படும் பொருட்களுக்கும், ஆசைப்படும் பொருட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மதிப்பிட கற்றுக்கொடுப்பதும் நல்லது. தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனமாக செயல்படுவதற்கும் ஆசைகளை அளவோடு வைத்துக்கொள்ள தெரிந்துகொள்வதும் எதிர்காலத்தில் நன்மை பயக்கும்.
சிறு வயதில் தொடங்கும் இக்கல்வி பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தித் தருகிறது. கற்றுக்கொண்ட அறிவை தம் வாழ்வில் செயல்படுத்தும் சிறுவர்கள் போதிய சேமிப்புடன் ஆரோக்கியமான உறவை கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்த உதவுகிறது.
பெரியவர் ஆகும் வரை துணை நிற்கும் இந்த அறிவு, நிதி சார்ந்த பல பிரச்சினைகளை எதிர்காலத்தில் சந்திக்காமல் இருக்க பெரிதும் கைகொடுக்கும்.
இதனால், அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் கூட அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும். போதிய நிதி சேமிப்புகள் கவலையற்ற ஓய்வு காலத்திற்கு வழிவகுக்கும்.

