முதியோர் பராமரிப்பு சேவைகள் வழங்குபவர்களின் தேவை அதிகரித்துள்ளது

2 mins read
3aead7c9-be82-4fee-bb3c-b1e9a76f15d3
-

முதியோர் பராமரிப்பு சேவைகளை வழங்குபவர்கள் தங்களின் சேவைகளை விரிவாக்கம் செய்து வருகின்றனர். சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தின் பலதரப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றியமைக்கும் பணியில் உள்ளன.

துடிப்பாக மூப்படைதலை ஊக்குவிக்கும் நிலையங்களை நாடி வரும் முதியோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாக கூறியது சிஎன்ஏ (CNA) செய்தி. இந்த தேவை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க உள்ளதாகவும் அது தெரிவித்தது.

அங் மோ கியோவில் உள்ள இத்தகைய ஒரு நிலையம் 3 ஆண்டுகளுக்கு முன்பு 300 குடியிருப்பாளர்களுக்கு சேவைகள் வழங்கியது. இன்றோ அது 2000க்கும் மேற்பட்ட முதியோரை பரமாரித்து வருகின்றது.

இதுபோன்ற நிலையங்களில் இணைந்துள்ள மூத்தோர் தம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிலையம் ஏற்பாடு செய்யும் பல நடவடிக்கைகளில் கலந்து கொள்கின்றனர். தம் நண்பர்களுடன் சேர்ந்து நடவடிக்கைகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்களில் சிலர் பகிர்ந்துகொண்டனர்.

நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மூத்தோரை தேடி கண்டுபிடித்து நிலைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கின்றனர்.

முன்பு வாடகை வீடுகளில் இருந்த முதியோருக்கு மட்டும் சேவைகள் வழங்கி வந்த நிலையங்கள் இப்பொழுது உதவி தேவைப்படும் மூத்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பலதரப்பட்டவர்களை சேர்த்துக் கொள்கின்றன.

மூத்தோர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்த எண்ணம் விரிவடைந்து வருகிறது. உடல் மற்றுமல்லாது மனம் சார்ந்த தேவைகளையும் கருத்தில் கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. சொந்த வீடு உடையவர்களாக இருப்போரும் தனியே துணையின்றி இருப்பவர்களாக இருக்கக்கூடும். ஆகையால், தங்களது சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன பல நிலையங்கள்.

மூத்தோர் பலர் உதவி நாடிச் செல்வதில்லை. சமூக சேவைகள் ஏழைகளுக்கு மட்டுமானவை என்ற எண்ணம் மூத்தோரிடையே நிலவுகின்றது என்று ஒரு சமூக ஊழியர் சிஎன்ஏ (CNA) செய்தியிடம் கூறினார்.

தேவைகள் உள்ள மூத்தோரை கண்டறிய பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. துடிப்பாக மூப்படைவதை ஊக்குவிக்கும் நிலையங்களில் இணைய அவர்களை ஊக்குவித்து வருகின்றனர் நிலைய ஊழியர்கள்.