தேசத்தந்தை அமரர் லீ குவான் யூ 1923ல் செப்டம்பர் 16ஆம் தேதியில் பிறந்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமரும் மக்கள் செயல் கட்சியின் தோற்றுநர்களின் ஒருவரும் ஆன திரு லீ 52 ஆண்டு சேவைக்கு பிறகு மார்ச் 23, 2015ல் காலமானார்.
அவரின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இவ்வாண்டு சிங்கப்பூர் நாணய வாரியம் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல முயற்சிகளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் திரு டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் கூறினார்.
தேசிய மரபுடைமைக் கழகம் சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகத்தை மக்களின் காட்சிக்கு திறந்துள்ளது. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தேசத்தந்தையை கொண்டாட சமூகத்தினரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
திரு லீ சிங்கப்பூரர்களுக்கு விட்டுச்சென்ற சிறப்புகள், பண்பு நெறிகள், வாழ்க்கை அனுபவங்களை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இனி வரும் தலைமுறையினர் திரு லீ எவ்வளவு இன்னல்களைத் தாண்டி இந்த நாட்டை உருவாக்கி மெருகேற்றியுள்ளார் என்பதை உணர்ந்துக்கொள்வதும் நினைவில் வைத்து கொண்டு தேசப்பற்றுடன் இருப்பதும் முக்கியம்.
தனியார் கல்வி நிதி ஒன்றை வணிகத் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த திரு லீயை நினைவுகூர இது பொருத்தமானது என அவர்கள் கூறியதாக அமைச்சர் டான் சொன்னார்.
பல்வேறு தரப்பினருடன் இணைந்து அரசாங்கம் நூற்றாண்டு விழா திட்டங்களை ஒருங்கிணைக்க உள்ளது. அரசாங்க அமைப்புகளும் திட்டங்களைக் கொண்டுள்ளன. இவ்வாண்டின் பிற்பகுதியில் நாட்டு நிர்மாணத் தலைவர்கள் தொடர்பான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய கண்காட்சிகள் தேசிய அரும்பொருளகத்தில் இடம்பெறும்.

