லாபநோக்கமற்ற அமைப்பான "ஈடன் ஹவுஸ்" (Eton House) "ஜாய்ஃபுல் லேர்னிங்" எனப்படும் இன்பம் தரும் கல்வி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத்திட்டம் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தி அவற்றின் அருமையை உணர உதவுகிறது. கதைச் சொல்லும் அங்கங்கள் போன்றவற்றின்மூலம் சிறாரின் மொழியறிவு, கணித அறிவு, எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் போன்றவற்றை மேம்படுத்த அது விழைகிறது.
மூன்றிலிருந்து ஆறு வயது வரை உள்ள பெரும்பாலான பிள்ளைகள் தம் குடும்பங்களுடன் ஓரறை அல்லது ஈரறை வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். வாரந்தோறும், இத்தகைய 15 சிறுவர்கள், தெம்பனிஸில் இருக்கும் கேர் கார்னர் குடும்பச் சேவை நிலையத்தில் கூடி வாசிக்க கற்றுக்கொள்வர், ஓவியங்கள் வரைவர், கலைப்பொருட்கள் செய்வர்.
2021ல் தொடங்கிய இந்த முயற்சி ஆண்டிற்கு 40 முறை இதுபோன்ற முயற்சிகளை நடத்தி வருகிறது. பாலர் பள்ளியில் தொடங்கும் இக்கல்வி அவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கி கொடுத்து சுமுகமாக தொடக்கப்பள்ளியை தொடங்க உதவுகிறது.
ஈடன் ஹவுஸ் இதர சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்ததால் இத்திட்டத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது ஆறு இடங்களில் நடப்பில் உள்ள இத்திட்டம் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்ந்தவுடன் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கம் காணும். இதன்மூலம் 300க்கும் அதிகமான குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
31 வயது பாலர் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் நுர் இஸோரா ஸஹிட், மாதத்திற்கு இரு சனிக்கிழமைகளை வாசிப்பு வகுப்புகள் நடத்த அர்ப்பணிக்கிறார். ஒவ்வொரு வகுப்பும் அவருக்கு தொண்டூழியத்தின் இன்பத்தையும் முக்கியதையும் நினைவூட்டுகிறது என்று கூறுகிறார்.
சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதில் அனைவரும் பங்காற்றலாம், அவர்கள் வாழ்வில் முன்னேறுவதை கண்டு மனநிறைவு பெறலாம் என்று கேர் கார்னர் அமைப்பின் துணை இயக்குனர், திரு கேரி லிம் கூறினார்.

