கொவிட்-19 சூழலுக்குப் பின்னர் சிங்கப்பூரின் சுகாதாரத் துறை மாறி வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 24,000 ஊழியர்களைச் சுகாதாரத் துறைக்கு ஈர்க்கும் இலக்கை நாம் கொண்டுள்ளோம். மாணவர்களை இதற்காகத் தயார்படுத்தும் முயற்சியில், நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியின் உயிர் மருத்துவ அறிவியல் பட்டயப்படிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்தப் பாடத்திட்டத்தில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இனி, தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இரு கல்விப் பாதைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஓராண்டு காலத்திற்கு மாணவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனையுடன் மருத்துவப் பயிற்சியில் ஈடுபடலாம். அல்லது, மருத்துவ அறிவியல் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து ஆறு மாத கால வேலைப் பயிற்சியை அவர்கள் மேற்கொள்ளலாம்.
சுகாதார சேவை ஆராய்ச்சி, மருத்துவப் பரிசோதனை, மருத்துவப் புத்தாக்கம் முதலியவற்றில் மாணவர்களுக்குக் கூடுதல் அனுபவம் கிடைக்கும்.
மூன்றாம் ஆண்டு மாணவரான கே. எஸ். கௌதம், மருத்துவம் படித்து எதிர்காலத்தில் மருத்துவராகும் கனவு கொண்டுள்ளார். பாடத்திட்ட மாற்றங்களால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் கிட்டும் புது வாய்ப்பு,த் தனக்குக் கைகொடுக்கும் என அவர் நம்புகிறார்.
"நான் சிறுவயதாக இருந்தபோது என் தாத்தா மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவராகும் என் கனவுக்கு அந்தச் சம்பவமே காரணம். ஆனால், ஒரு மருத்துவரின் வாழ்க்கை எப்படி இருக்கும், எவ்வகையான சிரமங்களை அவர் எதிர்நோக்குகிறார், ஆகியவை, நேரடி அனுபவத்தின்மூலம் மட்டுமே தெரிய வரும்," என்றார் மாணவர் கௌதம்.
குறிப்பாக, 'கிரிஸ்பர்' (CRISPR) எனப்படும் மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை ஆவலுடன் தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

