திரு இ.ஜே. ஃபிலிப் ஜோஷுவாவிற்கு வயது 42. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மூச்சுத் திணறலுடன் இவர் கண்விழித்தார். மருத்துவரிடம் சென்ற அவர், உடலில் அதிகளவு கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், மிதமான நீரிழிவு நோய் ஆகியவை இருப்பதைத் தெரிந்துகொண்டார். அப்போது இவரது உடல் எடை 90 கிலோகிராமுக்கு மேல் இருந்தது.
சிறுவயதில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் ஜோஷுவா. ஆனால், 20 வயதுக்குப் பின்னர் இவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.
பணியில் படிப்படியாக உயர்ந்து மதுக்கூட உரிமையாளரானார் ஜோஷுவா. மதுபானம் அருந்துதல், மன உளைச்சல், தூக்கமின்மை முதலிய பழக்கங்கள் இவரது உடல்நலனையும் மனநலனையும் பெரிதும் பாதித்தன.
"இன்னும் இரண்டு ஆண்டுகளில் என் உடல்நலம் வெகுவாக மோசமடையும் என்று அன்று மருத்துவர் கூறியது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என் வாழ்க்கை நடைமுறைகளை உடனடியாக மாற்றவேண்டும் என்று எண்ணினேன்," என்று கூறினார் ஜோஷுவா.
எனவே, அவர் தனது ஆரோக்கிய பயணத்தைத் தொடங்கினார். முதலில், உடல் எடையை விரைவாகக் குறைக்க அவர் முயற்சி செய்தார். மாத்திரைகள், உணவுமுறை மாற்றங்கள் எனப் பலவற்றையும் அவர் முயன்று பார்த்தார். அவை எதுவும் பயனளிக்கவில்லை.
ஆரோக்கியத்தைப் பேணுவதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்பதை ஜோஷுவா புரிந்துகொண்டார். பின்னர், உடற்பயிற்சிக்கூடத்துக்கு வழக்கமாகச் செல்லத் தொடங்கினார். தற்போது இவரது உடல் எடை 71 கிலோகிராம். பிறருக்கு நல்ல உடற்பயிற்சி வழிகாட்டுதலை வழங்க எண்ணி, 'ஆல்ஃபா பீஸ்ட் ஃபிட்னஸ்' எனும் உடற்பயிற்சி கூடத்தை இவர் தொடங்கியுள்ளார்.

