தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலையால் துயர் களையும் புவனேஸ்வரி

2 mins read
6fe7aa55-b72c-4e55-90cb-2f6982516785
-

மனத்தில் இருக்கும் ஆழமானத் துயரங்களைப் போக்கக் கலையைப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார், உளவியல் நிபுணரான 36 வயது குமாரி புவனேஸ்வரி பிரகாசம்.

தந்தையின் இழப்பால் ஆறு மாதங்களுக்கும் மேலாக அவர் மனம் உடைந்து போயிருந்த காலத்தில், கலை உளவியல் முறைகளை அவர் பயன்படுத்திப் பயன் அடைந்தார். அதன் பின்னர், இத்துறையில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்படவே, லாசால் கலைக் கல்லூரியில் கலை உளவியலில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டார்.

2017-ஆம் ஆண்டு முதல் முழுநேர கலை உளவியல் நிபுணராக புவனேஸ்வரி பணியாற்றி வருகிறார். துயரத்தில் தவிக்கும் மற்றவர்களுக்கு உதவ, 'சோலஸ் ஆர்ட் தெரப்பி' எனும் சமூக நிறுவனத்தை அவர் தொடங்கினார். தொடக்கத்தில் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி அளித்து வந்தார் குமாரி புவனேஸ்வரி. பின்னர், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் தனது சேவைகளை வழங்கத் தொடங்கினார்.

கலை உளவியல் பயிற்சிகள் எல்லாருக்குமே எட்டக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது இவரது குறிக்கோள்.

"மனநலத்தைப் பலரும் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். கலை உளவியல் பயிற்சிகளைப் பலர் ஏளனமாகவும் கருதுவர். இந்த சவால்களைத் தாண்டி சோலஸ் ஆர்ட் தெரப்பி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றது," என்றார் குமாரி புவனேஸ்வரி.

சமூக நிறுவனமாக இயங்கும் சோலஸ் ஆர்ட் தெரப்பி பல்வேறு வயதினருக்கும் பயிற்சி வழங்குகிறது. மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் பயிலரங்குகளையும் அது ஏற்பாடு செய்து வருகிறது. இதுவரை 245 பேர் தனிப்பட்ட முறையில் இந்த நிறுவனத்தின் சேவைகளின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.