கவலைகளற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்றும் வழக்கறிஞர்

கவலைகளற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்றும் வழக்கறிஞர்

2 mins read
6550971a-d032-4e95-8d97-69ced25255d3
-

வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் திரு ஜெயராஜ் இந்திர ராஜுக்கு வயது 68. இன்னமும் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளோரையும் சிரத்தையோடு பேணி வருகிறார் இவர். அவரைத் திடகாத்திரமாக வைத்துக்கொள்ளும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் மேற்கொண்டு இளமையுடன் திகழ்கிறார் இவர்.

திரு இந்திர ராஜின் நாளானது அனைத்து வாரநாள்களிலும் விடிகாலை ஐந்து மணிக்குத் தொடங்குகிறது. அவரும் அவரது மனைவியும் காலையில் நீந்தச் சென்றுவிட்டு, பின்னர் தங்களது அலுவல்களைச் செய்யத் தொடங்குவர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்த பழக்கத்தை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,100 மீட்டர் வரை நீந்தி வருகின்றார் திரு இந்திர ராஜ்.

"உடற்பயிற்சி செய்யாத என்னுடைய நண்பர்கள் அதிக மன உளைச்சலோடு காணப்படுவர். அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம் எனது சுருக்கங்களற்ற முகத்தைப் பற்றி வியந்து கேட்பர். வழக்கறிஞர்களாகப் பணிபுரியும் எனது நண்பர்கள், தொடர்ந்து கடுமையாக உழைத்து உடலை வறுருத்திக்கொண்டதைக் கண்டுள்ளேன். அத்தகைய வாழ்க்கைமுறையை நான் விரும்பவில்லை." என்றார் திரு இந்திர ராஜ். பராமரிப்பு இல்லத்தில் உள்ள தனது 74 வயது அண்ணனைச் சென்று காணுவதற்கும் தினமும் நேரம் ஒதுக்கி வருகின்றார் அவர்.

வழக்கறிஞர் பணியைத் தவிர்த்து, திரு இந்திர ராஜ் தொண்டூழியம் செய்தும் வருகின்றார். செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையின் தொடக்கத்திலிருந்தே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு அதன் நிர்வாகத்தில் பங்காற்றினார் திரு இந்திர ராஜ். இத்தகைய தொண்டூழியப் பணிகளே தனக்கு அதிக மனநிறைவைத் தருவதாக அவர் உணர்கிறார்.