அன்றாட வேலைகள் பலவற்றை நாம் எளிதாக முடித்துவிடுகிறோம். ஆனால், உடற்குறை உள்ளவர்களுக்குச் சுலபமான பணிகளை முடிப்பது கூட சவாலாக இருக்கலாம். அத்தகையோருக்கு உதவும் வகையில் என்யுஎஸ் கணித, அறிவியல் உயர்நிலைப் பள்ளி, தேசிய தொடக்கக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இரு செயலிகளை உருவாக்கி உள்ளனர்.
'என்ஜினியரிங் குட்' (Engineering Good) எனும் இலாப நோக்கமற்ற அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்கள், பயனுள்ள புத்தாக்கப் படைப்புகளைத் தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்க வேண்டும்.
கேட்கும் ஆற்றலை இழந்தோருக்காக நான்கு தேசிய தொடக்கக் கல்லூரி மாணவர்கள், 'ஐஹியர்' (EyeHear) என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். நேருக்கு நேர் நின்று உரையாடும்போது இத்தகையோர் பிறர் பேசுவதைப் புரிந்துகொள்ள சிரமப்படலாம். அந்தச் சிரமத்தைப் போக்க உதவும் வகையில் இந்த செயலியை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
இதற்காக மூக்குக்கண்ணாடியில் பொருத்திக்கொள்ளும் ஒரு சிறிய தகடை (clip-on panel) உருவாக்கி உள்ளனர் மாணவர்கள்.
ஒருவர் பேசும்போது, கூறப்படும் வார்த்தைகள் பயன்படுத்தவரின் தொலைபேசியில் உள்ள 'ஐஹியர்' செயலியில் பதிவாகும். பின்பு, இவ்வார்த்தைகள் எழுத்து வடிவமாக மாற்றப்பட்டு கண்ணாடியில் தோன்றும். இதன்மூலம், அவர்கள் சுயமாக உரையாடல்களைப் புரிந்துகொள்ளலாம்.
"நம் சமூகத்தில் உடற்குறையுள்ளவர்களுக்குப் பல சாதனங்கள் உள்ளன. ஆனால், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குப் பெரிதாக ஏதுமில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே சைகை மொழி மற்றும் காது கருவிகள் உள்ளதால், புதிதாக நாம் ஏதும் உருவாக்க முயற்சி செய்வதில்லை. அதனால் நாங்கள் இந்த முயற்சியில் இறங்கினோம்," என்றார் குழுவில் ஒருவரான அமிர்த்தா.

