ஸ்காட்லாந்தில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், 'டிஷும்' என்ற இந்திய உணவகத்தைப் பற்றி அறிய வந்து, அங்கு வாடிக்கையாளராகச் சென்றார் மனோஜ் குமார். அது அவருக்குப் புதுவித அனுபவமாக அமைந்தது.
"இந்திய உணவை எப்படி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப படைப்பது, இந்திய உணவை மற்ற இனத்தவர் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டேன். இதுபோன்ற ஓர் இந்திய உணவகத்தைச் சிங்கப்பூரில் திறக்க அதுவே என்னைத் தூண்டியது," எனக் கூறினார் 27 வயது மனோஜ் குமார் அன்பழகன்.
அவர் 2019-ஆம் ஆண்டு டக்ஸ்டன் ஹில் பகுதியில் 'கிச்சன்குமார்ஸ்' எனும் உணவகத்தைத் தொடங்கினார். இங்கு மேற்கத்திய, இந்திய கலவையில் உணவுவகைகள் விற்கப்படுகின்றன.
பெரும்பாலும் கடையில் அமர்ந்து உணவு உண்ணும் வாடிக்கையாளர்களையே கிச்சன்குமார்ஸ் உணவகம் நம்பியிருந்தது. இந்நிலையில், அது உடனடியாக தனது செயல்முறைகளை மாற்ற வேண்டியிருந்தது.
இணையத் தளத்தில் உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இருப்பினும், நிச்சயமற்ற சூழலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
பிரியாணி போன்று எந்த உணவு வகையை நீண்ட நேரத்திற்குக் கெடாமல் வைத்திருக்க முடியுமோ, அந்த உணவுவகைகள் மட்டுமே இணைய உணவு விநியோகப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
சமூக ஊடக நட்சத்திரங்களாக இருக்கும் 'இன்ஃப்லுவன்சர்ஸ்' மூலம் கிச்சன்குமார்ஸ் தனது வியாபாரத்தைப் பிரபலப்படுத்தியது. தனது உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் இந்த உத்தி, உணவகத்துக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
"இந்த உத்தியைப் பயன்படுத்தியதில், அன்னையர் தினத்தன்று எங்களுக்குச் சமாளிக்க முடியாத அளவுக்கு 'ஆர்டர்'கள் வந்து குவிந்தன," என்று தெரிவித்தார் உரிமையாளர்களில் ஒருவரான டிலிப் குமார்.

