நண்பர்களின் உண்மை சுபாவத்தைக் காட்டுவதாகக் கூறுகிறது 'பீரியல்' (BeReal) எனப்படும் சமூக ஊடகத் தளம். 2020-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலியில், பிற சமூக தளங்களைப் போன்று, புகைப்படங்களைப் பதிவிடலாம். ஆனால், எவ்வித படத் திருத்தங்களும் செய்ய இயலாது; முன்பே எடுத்து வைத்த புகைப்படங்களைப் பதிவிட முடியாது. அந்த இடத்தில் அந்த நேரத்தில் நாம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாகப் பதிவிட இந்தத் தளம் ஊக்குவிக்கிறது. வேறுபட்ட செயலியாக உள்ள பீரியல், இளையர்களிடத்தில் பிரபலமடைந்து வருகிறது.
அழகைக் கூட்டி காட்டும் 'ஃபில்டர்ஸ்' எனப்படும் பட திருத்த கருவிகள் எதுவும் பீரியலில் இல்லை. திருத்தப்பட்ட படங்களைப் பதிவிட அனுமதியும் இல்லை. எனவே, பிற தளங்களில் இருப்பது போன்ற போலி தோற்றம் பீரியலில் இல்லை என்றும், அது புதுமையாக உள்ளது என்றும் கூறுகிறார், ஒரு வாரமாக இச்செயலியைப் பயண்படுத்தி வரும் பிரீத்தி திலகர்.
கேமராவுக்காக எடுக்கும் புகைப்படங்களை விடுத்து, வீட்டில் ஓய்வெடுப்பது முதலிய கவர்ச்சியற்ற விஷயங்களைப் பீரியலில் காண முடிவதால், இது நண்பர்களை இணைக்க வல்லது என்று சிலர் நம்புகின்றனர்.
"நாம் புகைப்படங்களைத் தாமதாகவும் பதிவிடலாம் என்பதால் சில சமயங்களில் நான் நண்பர்களுடன் வெளியில் செல்லும்வரை காத்திருப்பேன். பலர் இவ்வாறு தங்களது சமூக வாழ்க்கையைக் காட்டுவதற்கே பீரியலைப் பயன்படுத்துகின்றனர்," என்றார் மற்றொரு மாணவி.
மின்னிலக்க உலகை சூழ்ந்துள்ள போலித்தனமான மாயையை விலக்கி உண்மையான உறவுகளை வளர்ப்பதைத் தனது குறிக்கோளாக கொண்டுள்ளதாகக் கருதும் பீரியல் செயலி, பிரபலமாவதற்குப் பயன்படவில்லை என்றாலும், வாழ்வை மெருகூட்டிக் காட்டுவதற்குப் பயன்பட்டே வருகிறது.

