நீரின் முக்கியத்துவத்தைக் காலந்தோறும் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தி வருகின்றன.
திருக்குறளின் முதல் 10 குறள்கள் கடவுள் சிறப்புப் பற்றியவை. 11-ஆம் குறளில் வான் சிறப்புப் பாடப்படுகிறது. 'நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது' என்று எழுதினார் திருவள்ளுவர்.
தண்ணீருக்குக் குறைவில்லாத செழிப்பான காலத்திலேயே அதன் சிறப்பு ப்பற்றி வள்ளுவர் எழுதியதை வைத்து, தண்ணீரின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும் எனக் கூறினார் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் திரு சோ. தர்மன்.
நீர் மேலாண்மை, நீர்வளங்கள் குறைவது ஆகியவற்றைக் கொண்டு அவர் எழுதிய 'சூல்' எனும் நாவல், 2019-இல் இந்தியாவின் உயரிய சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
நூலக வாரியம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய எழுத்தாளர், நீர்நிலை மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு, மறையும் விவசாயத் தொழில், வனவிலங்குகள் அழிந்துபோவது ஆகியவை குறித்து உரையாற்றினார்.
"சூல் நாவலின் பெயர் காரணம் குறித்துப் பேசிய திரு தர்மன், "10 மாத கர்ப்பிணிப் பெண்ணை நிறை சூலி என்போம். உலகத்திற்கு ஓர் உயிரை புதிதாகக் கொடுக்கக் கூடிய தாயைச் சூலி என்று சொல்கின்றபோது, பல்வகை உயிரினங்களுக்கும் தாயாக நீர்நிலைகள் விளங்குவதை நான் உணர்த்த விரும்பினேன்," என்று விளக்கினார்.
"இந்தியாவில் 60-70% மக்களுக்கு விவசாயமே தொழில். ஆனால், இதை மையப்படுத்தி வெளிவரும் படைப்புகள் மிகக் குறைவு. இது குறித்துப் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளதால், விவசாயம் சார்ந்த படைப்புகளைத் தேடிப் படிப்பேன்," என்றார் திரு தர்மன்.

