ஜாலான் புசார் வட்டாரத்தில் தாழ்வான பகுதிகள் இருப்பதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சாத்தியம் உண்டு. அதனைத் தடுக்க அங்குப் புதிய நிலத்தடி நீர் தடுப்புத் தொட்டி வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று பியுபி எனப்படும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்து உள்ளது.
சையது ஆல்வி ரோட்டுக்கு அருகில் அமையவிருக்கும் அந்த நீர் தடுப்புத் தொட்டியின் கட்டுமானப் பணிகள் 2021-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன.
பருவநிலை மாற்றத்தினால் அடிக்கடி கடுமையான மழைப் பொழிவுகளைச் சிங்கப்பூர் கண்டு வருகிறது. இந்த நிலைக்கு ஏற்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சி செயுத்செய்து வருகிறது. அம்முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நீர் தடுப்புத் தொட்டிக் கட்டி முடிக்கப்பட்டவுடன் அது நான்கு ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய அளவுள்ள நீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
ஜாலான் புசார் பகுதியில் பெய்யும் மழை நீரைத் தற்காலிகமாக அத்தொட்டியில் சேமித்து வைக்க முடியும். கடும் மழைப் பொழிவுக்குப் பிறகு சேமித்து வைக்கப்பட்டு உள்ள அந்த நீர் மீண்டும் கால்வாய்க்குத் திருப்பி விடப்படும்.
இந்த வட்டாரத்தில் வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கழகம் முன்பு பல முயற்சிகளை எடுத்துள்ளது.
2015-இல் சுங்கை ரோடு, ரோச்சோர் கெனல் ரோடு ஆகியவற்றில் ஓடும் ரோச்சோர் கெனல் கால்வாயின் அளவு விரிவுப்படுத்தப்பட்டு, அதன் ஆழமும் அதிகப்படுத்தப்பட்டது.
சையது ஆல்வி ரோட்டில் நீர் தடுப்புத் தொட்டி கட்டும் திட்டத்தை 2020-ஆம் ஆண்டில் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

