சிங்கப்பூர், தனது தண்ணீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் செலவிலான தண்ணீர் ஆய்வு நிலையம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்ணீர் துறையில் மேலும் பல தகவல்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் இரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
'குரிட்டா வாட்டர் இண்டஸ்ட்ரீஸ்' எனும் ஜப்பானிய நிறுவனம் இயக்கவிருக்கும் புதிய ஆய்வு நிலையம் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். பியுபி எனும் பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஜூரோங்கில் இந்த நிலையம் செயல்படவிருக்கிறது.
ஜப்பானுக்கு வெளியே ஆசியாவில் செயல்படவிருக்கும் முதல் ஆய்வு நிலையம் அது. கடல் நீர் சுத்திகரிப்பு, கழிவு நீர் மறுபயனீடு ஆகியவற்றில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்த நிலையம் கவனம் செலுத்தும். புதிய ஆய்வு நிலையத்தைப் பற்றிய செய்தியைச் சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நடைபெற்ற அனைத்துலக நீர் வார நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பியுபி நிறுவனம் இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டது. சவூதி அரேபியாவின் கடல்நீர் சுத்திகரிப்புப் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலிய நீர் கூட்டுறவு அமைப்புடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் பிரதான நீர்வளமாக மலேசியாவில் உள்ள லிங்கியு நீர்த்தேக்கம் விளங்குகிறது. 2016-ஆம் ஆண்டில், இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் 20 விழுக்காடாகக் குறைந்தது. 2014-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர் அளவு குறைந்திருந்தது. எனவே, நீர் பாதுகாப்பில் சிங்கப்பூர் சுதந்திரமாக விளங்க முற்பட்டு வருகிறது.

